மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது வழக்கமான நடைமுறைதான். அனைத்துப் பிரதமர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இதுபோன்ற கடிதங்கள் வந்திருக்கின்றன. இவ்வாறு வரும் கடிதங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கோ, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு பிரதமர் என்ற முறையில், நான் என்ன செய்தேனோ அவற்றை முழு மனத் திருப்தியோடுதான் செய்திருக்கிறேன். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்றார் மன்மோகன் சிங்.
இதேபோன்ற கருத்தைத் தெரிவித்த ப.சிதம்பரமும், மத்திய அரசுக்கு வரும் நூற்றுக்கணக்கான கடிதங்களையும் அமைச்சர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது; அவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்றார்.
“மோசமான நிலையில் பொருளாதாரம்’
இந்தியப் பொருளாதாரம், நல்ல நிலைமையில் இல்லை என்று மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “நாட்டின் உண்மையான பொருளாதார நிலை’ என்ற ஆய்வறிக்கையை, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் திங்கள்கிழமை அவர் வெளியிட்டார்.
“மத்திய அரசின் முன் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை’ என்று மன்மோகன் சிங் கூறினார்.
அப்போது, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை மத்திய அரசு எண்களாக அறிவிக்கிறது. ஆனால், இவற்றைக் கண்டு மக்கள் மயங்கவில்லை. வேலைவாய்ப்புகள் எங்கே? என்று அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்’ என்று ப.சிதம்பரம் கூறினார்.