மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை பொருட்களை வாங்க ‘ஓணம் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கணிசமான மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களை கட்டும்.

மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, ரயில்வே துறையில் மலையாள மக்கள் அதிகம் பேர் பணிபுரிவதால், ஓணம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது.

உதகை கிரெசண்ட் கேசில் பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரிகளில் ஓணம் திருவிழாக்களை மாணவர்கள் நடத்தினர். விழாக்களில் பூக்களம் அமைத்து மாவேலி அரசரை மாணவ, மாணவியர் வரவேற்றனர்.

தொடர்ந்து, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை தங்களுடன் இணைத்துக்கொண்டு ‘திருவாதிரை’ நடனம் ஆடினர்.

கேரளாவில் கொண்டாடப்படுவது போல நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மக்கள் பயன்பெறும் வகையில் ‘ஓணம் சந்தை’ முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உதகை நகர மலையாளிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த சந்தையில், அரிசி முதல் காய்கறிகள் வரை, சிப்ஸ் முதல் ஊறுகாய் வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மலையாள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

உதகை நகர மலையாளிகள் சங்க தலைவர் சி.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள 7.5 லட்சம் மக்கள் தொகையில், சுமார் 1.5 லட்சம் பேர் மலையாளிகள். இதனால், ஓணம் மற்றும் விசு பண்டிகைகள் மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதில், ஓணம் பண்டிகையில் பரிமாறப்படும் ஓணம் சத்யா முக்கியமானது.

இதற்கு கைக்குத்தல் அரிசி, காய்கறிகள், நேந்திர வாழை, இஞ்சி புளி, தேங்காய் ஆகிய பொருட்கள் தேவை. இதற்காக மலையாள மக்கள் மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவுக்கு சென்று வாங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கால விரயம் மற்றும் பணம் விரயமாகிறது.

இந்நிலையில், ஓணம் பொருட்கள் மலையாள மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் ‘ஓணம் சந்தை’ நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சந்தையில் காய்கறி மற்றும் அனைத்துப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ததால், விலையில் சலுகை கிடைத்துள்ளது.

இந்த சந்தை உதகையில் நடத்தப்படுவதால் மலையாள மக்களுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதுடன், அலைச்சலும் குறைந்துள்ளது. இதனால், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.