மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை !!

அரசு நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான வழக்கில், மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமராக, 2009 – 18 வரை பதவி வகித்தவர் நஜீப் ரசாக், 67. இவர் பிரதமராக பதவி வகித்தபோது, ‘1எம்டிபி’ என்ற அரசு முதலீட்டு நிறுவனத்தின், பல ஆயிரம் கோடி ரூபாயை, தன் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.360 கோடி அபராதம்இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக, மலேஷியாவின் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி முகமது நஜ்லன் கஜாலி நேற்று அளித்த தீர்ப்பு:நஜீப் மீதான, நம்பிக்கை துரோகம், அரசு பணத்தை கையாடல் செய்தது, அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன. அவர் மீதான ஏழு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுகிறது.அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்கு, 12 ஆண்டும், நம்பிக்கை துரோகம் செய்த வழக்கில், 10 ஆண்டும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்த வழக்கில், 10 ஆண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த தண்டனைகளை, அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், அபராதமாக, 360 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தீர்ப்பளித்தார்.தீர்ப்பை கேட்டதும், கோலாலம்பூர் நீதிமன்றத்துக்கு வெளியில் கூடிஇருந்த நஜீப்பின் ஆதரவாளர்கள் பலர் கதறி அழுதனர். நீதிமன்றத்துக்கு வந்திருந்த நஜீப், முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். மேல் முறையீடு’தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், நஜீப் ரசாக், அதிகபட்சமாக, 12 ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்’ என, மலேஷிய சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, நஜீப் ரசாக் சமூக வலைதளத்தில் கூறுகையில், ‘எனக்கு நீதி வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளேன். ‘என் மீதான களங்கத்தை துடைப்பதற்கான அனைத்து முயற்சியிலும் ஈடுபடுவேன்’ என, தெரிவித்துள்ளார்.ஊழல் நடந்தது எப்படி?நஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது, 2009ல், ‘1எம்டிபி’ எனப்படும், மலேஷிய மேம்பாட்டு மையம் என்ற நிறுவனம் துவக்கப்பட்டது. மலேஷிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, சர்வதேச அளவில் பங்குதாரர்களை ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிறுவனம் துவக்கப்பட்டது.

ஆனால், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான, 37 ஆயிரம் கோடி ரூபாய், நஜீப் ரசாக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக, அமெரிக்க பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.கடந்த, 2015ல், இந்த நிறுவனம், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து, சர்ச்சை எழுந்தது.’1எம்டிபி’ நிறுவனத்திலிருந்து மாற்றி விடப்பட்ட பணம் முழுதும், ரியல் எஸ்டேட், விமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.

நஜீப் ரசாக், பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும், மலேஷிய போலீசார், அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, ஏராளமான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.