மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

அமெரிக்காவைக் காப்பாற்ற வேண்டுமானால், அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும்’ என, மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்ததற்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தற்போது பாலத்தீன – இஸ்ரேல் விவகாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். குறிப்பாக, பாலத்தீன பிரச்னையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து வருகிறார்.
இந்நிலையில், இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை’ முன்வைத்தார். அந்தத் திட்டம் குறித்து, மகாதீர் கூறியதாவது:

அமெரிக்கா முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தைப் புறக்கணிக்க பாலத்தீனத்துக்கு முழு உரிமை உண்டு. பாலத்தீனத்தை இஸ்ரேல் அரசு தொடர்ந்து ஒடுக்க நினைத்தால், மலேசியா அமைதி காக்காது. பாலத்தீனிய விவகாரம் தொடர்பாக, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பேச இருக்கிறேன்.
அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல. அமெரிக்காவைக் காப்பாற்ற அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள, அமெரிக்க தூதரகம், ‘அமெரிக்க அதிபர் குறித்து, மகாதீரின் கருத்துகள் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. மலேசியா – அமெரிக்கா இடையேயான நீண்ட நாள் உறவுக்கு ஏற்ப, மகாதீரின் கருத்துகள் அமையவில்லை’ என, கண்டனம் தெரிவித்துள்ளது.