மம்தா போராட்டம்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதுடில்லி : மத்திய அரசை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்களின் கருத்து :

முன்னாள் பிரதமர் தேவ கவுடா : கோல்கட்டாவிற்கு போலீஸ் கமிஷனரை கைது செய்ய நேற்று சிபிஐ சென்றது, சிபிஐ.,யை தவறாக பயன்படுத்துவதை காட்டுகிறது. இது அவசர நிலையை விட மோசமானது.மேற்குவங்கத்தில் நேற்று இரவு முதல் நடப்பதை பார்த்தால் பிரதமர் , சிபிஐ.,யை வழிநடத்துகிறார் என்பதை காட்டுகிறது. இது அவருக்கு பலனளிக்காது.

தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா : மம்தாவின் குற்றச்சாட்டுக்கள் சரியே. சர்வாதிகார போக்கு நாட்டிற்கு ஆபத்தை தரும். நாட்டின் எஜமானர்கள் மத்திய அரசு இல்லை. மக்கள் தான்.

காங்., குலாம் நபி ஆசாத் : பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசு பணியாற்றியது குறைவு. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலேயே கடந்த 5 ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது. பா.ஜ.,வை விட எந்த கட்சியும் அதிகம் ஊழல் செய்து விடவில்லை.

அகிலேஷ் (சமாஜ்வாதி ): மேற்குவங்கத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் இது போல் தான் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ஜ.,வும், மத்திய அரசும் சிபிஐ.,யை தவறாக பயன்படுத்தி வருகின்றன. இதை நானும் எனது கட்சியும் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்கின்றன.

சிவசேனா சஞ்சய் ராவத் : மிகப்பெரிய மாநிலமான மேற்குவங்கத்தின் முதல்வர் மம்தா தர்ணா போராட்டம் செய்வது முக்கியமானது. இது சிபிஐ., – மம்தா இடையிலானதா அல்லது மம்தா – பா.ஜ., இடையேயானதா என்பது வெகு விரைவில் தெரியும். ஒருவேளை சிபிஐ தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் இது நாட்டின் கண்ணியம் மற்றும் சிபிஐ.,யின் கவுரவம் தொடர்பான பிரச்னை.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் : மேற்குவங்கத்தில் மத்திய அரசு செய்வது மிகவும் ஆபத்தானது. இது அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. ஒவ்வொரு மாநில அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரதமர் இது போன்று சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இது பாதுகாப்பானதாக இருக்காது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி : இது நல்ல வளர்ச்சி இல்லை. மத்திய அரசு முறையாக நடந்து மாநில அரசுகளின் நம்பிக்கையை பெற வேண்டும். அரசு இயந்திரங்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எதிர்க்கட்சிகளை மத்திய அரசு நடத்தும் முறை பேரழிவை தரும்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி : எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. நாங்கள் மம்தாவிற்கு ஆதரவு தருவோம்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் : இதில் சம்பந்தப்பட்டவர்கள் தான் என்ன நடக்கிறது என்பதை விளக்க வேண்டும். இதில் நான் கருத்து சொல்ல முடியாது. சிபிஐ.,யும் அரசும் தான் இந்த கேள்விக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இந்த நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

மம்தா ஆதரவு அளிப்பது ஏன்?

பா.ஜ., தரப்பில் முரளிதரராவ்; சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ விசாரிக்கிறது. முதல்வர் மம்தா அரசியல் சட்டமைப்பை குலைக்க முயல்கிறார். மேற்குவங்கத்தில் ஜனநாயகத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. ஊழல் கறை படிந்த அதிகாரிகளுக்கு மம்தா ஆதரவு அளிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.