மன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்., முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது.

தற்போது பா.ஜ.,அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வரும் முக்கிய கட்சியாக காங்., இருந்து வருகிறது. இந்த நிலையில் 1.08 நிமிடங்களை கொண்ட மன்மோகனின் உரை இடம்பெற்ற வீடியோவை பா.ஜ., இன்று (டிச.,19) வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ., அந்த வீடியோவுடன், “2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மன்மோகன் சிங், அண்டை நாடுகளான வங்கதேசம், பாக்., போன்றவற்றில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியா வரும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கேட்டார். அதைத் தானே குடியுரிமை திருத்த சட்டம் வழங்குகிறது” என குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ., பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் மன்மோகன் சிங் பேசியதாவது : அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து நான் பேச விரும்புகிறேன். நமது நாட்டு பிரிக்கப்பட்ட பிறகு, வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்கள், துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் அகதிகளாக வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சலுகைகள் அளிப்பது நமது தார்மீக கடமை.
நமது துணை பிரதமர் (அத்வானி) இதனை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். மன்மோகனின் இந்த உரையின் போது, அப்போதைய துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அரசு தரப்பு வரிசையில் அமர்ந்துள்ளார்.
தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை காங்., எதிர்த்து வருவதையும், இந்த சட்டத்திற்கு எதிராக காங்., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டி, பா.ஜ., இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறது.