மனைவி வேண்டாம்: கணவர்கள் பூஜை

மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து ஏழு ஜென்மத்திற்கும் அவர்கள் மீண்டும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டனர்.

வட மாநிலங்களில் வட் பூர்ணிமா என்ற பண்டிகை மிகவும் பிரபலம். அன்றைய நாளில், திருமணமான பெண்கள் விரதமிருந்து, தங்களது கணவர்கள் நலமுடன் வாழவும், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டி கோயிலுக்கு சென்று மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டுவார்கள்.
நேற்று (ஜூன் 27) மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் நகரில் உள்ள கோயில் ஒன்றில், கணவருக்காக பெண்கள் விரதமிருந்து மரத்தை சுற்றி வந்து கயிறு கட்டினர்.

மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிலர், அதே மரத்தை எதிர்திசையில் சுற்றி வந்து கயிறு கட்டினர். மேலும் சுற்றி வரும் போது, ஏழு ஜென்மத்திற்கும் அவர்களே மனைவியாக வந்துவிடக்கூடாது என கோஷம் போட்டபடி வந்தனர்.

இது தொடர்பாக மனைவிகளால் பாதிக்கப்பட்டோருக்கான நலச்சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சட்டத்தை தவறாக பயன்படுத்தி எங்களது மனைவிகள் மோசமாக துன்புறுத்தியதாக கூறினார்.

மற்றொருவர் கூறுகையில், எனது மனைவி அளித்த பொய் புகார் காரணமாக எனக்கு 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றார். இன்னொரு நபர் கூறியதாவது: எனது உணவையும், எனது பணியையும் நானே செய்து கொள்வதால் எனக்கு மனைவி தேவையில்லை. அவரால் எனது வேலை போய்விட்டது. அவரது முகத்தை பார்ப்பதை விட இறப்பதே மேல் என்றார்.