மனைவி எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்

சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்காமல், சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் அருகில் உள்ள மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஏராளமானோர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கேயே தங்கி விடுகின்றனர்.
இதை தடுக்க, அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, சமீபத்தில் கடுமையான விதிகளை அமல்படுத்தியது. அதன்படி, அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவோர், கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதேசமயம், அவர்களுடன் வந்த, அவர்களது குழந்தைகள் தனியாக பிரிக்கப்பட்டு, எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பெற்றோரை பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் அலறி துடிக்கும் காட்சிகள், ஊடகங்களில் வெளிவந்து, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதிபர், டொனால்டு டிரம்பின் மனைவி, மெலனியாவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக அகதிகளாக வந்தவர்களை கைது செய்யும்போது, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல், இரு தரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்கும் உத்தரவு ஒன்றை அதிபர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் இந்த உத்தரவில் எதுவும் குறிப்படவில்லை.