மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் ( விக்கிபீடியாவின்படி இயற்பெயர் அப்துல் ஹமீது), அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

வழக்கமான ஒன்று

கூட்டங்களிலும் கவிதைகளிலும் இந்து மத பழக்க வழக்கங்களை விமர்சித்து பேசுவதும் எழுதுவதும் மனுஷ்யபுத்திரனின் வழக்கம். அவரது எழுத்தை பலர் படித்தாலும், ஏற்கனவே இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தும் மற்று மதத்தை விமர்சிப்பதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. நாளாக நாளாக, தன்னை பேச கூப்பிடும் அமைப்புகளை மகிழ்விப்பதற்காகவே அவர் மாற்று மதத்தை விமர்சித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தி.மு.க.,வின் அனுதாபியாகவும் இருக்கிறார்.

ஊழியின் நடனம்

ஊழியின் நடனம்’ என்னும் தலைப்பில் பெண்ணை மையமாக வைத்து இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி கவிதை எழுதியிருந்தார். இதனை கடந்த 18ம் தேதி அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அவரது அக்கவிதை பெண்களுக்கு எதிராகவும், இந்து பெண் தெய்வங்களை பழிப்பது போன்றும் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
அந்த கவிதை:
ஊழியின் நடனம்
……………………………………………….
மனுஷ்ய புத்திரன்
…………………………………………………
தேவி
உன் விடாய் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?
அது
ஊர்களையும்
நகரங்களையும்
அழிக்க வல்லதா?
அது
ஆலயங்களையும்
தெய்வங்களையும்
நீரில் மூழ்கச் செய்ய வல்லதா?
அது
பாதைகளை அழித்து
வழிகளை மறைத்து
தனித் தீவுகளை
உருவாக்க வல்லதா?
தேவி
உன் விடாய் குருதி
நிலத்தைக் கடலாக்கும்
கடலை ஊராக்கும்
மகா சக்தியா?
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்
எந்த அணையிட்டும் தடுக்கவியலாத
இயற்கையின் ஊழி நடனமெனெ
உனது ஒரு சொட்டு விடாய் குருதியை
அவர்கள் அஞ்சுகிறார்கள்
தேவி
உன் குருதியிலிருந்தே
உயிர்கள் பிறக்கின்றன
உன் குருதியிலேயே
உயிர்கள் தஞ்சம் கொள்கின்றன
உன் விடாய் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்
தேவி
சற்றே ஓய்வுகொள்
இது கருணைக்கான வேளை
18.8.2018
பகல் 2.15
மனுஷ்ய புத்திரன்
———–
இந்நிலையில் இக்கவிதை குறித்து நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் பா.ஜ., பிரமுகர் ஜமீலா போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: ‘ஊழியின் நடனம்’ எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய் குருதியையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
இந்த கவிதைக்கு திமுக தரப்பினர் கூட ஆதரவு தர மாட்டார்கள். சுய விளம்பரத்துக்காக மட்டுமே அவர் இவ்வாறு செய்துள்ளார். பெண்களை பற்றி பெருமையாக கூறுங்கள்; சிறுமைப்படுத்தாதீர்கள். இக்கவிதைக்காக மனுஷ்யபுத்திரன், பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.