மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே…

உலக புத்தகத் தின விழாவில் பேச்சு –

வந்தவாசி.ஏப்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார் பேசினார்.

இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவ- மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். புதிய நூலக உறுப்பினரகளுக்கான அடையாள அட்டையை வந்தவாசி இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் வழங்கினார்.

உலகப் புத்தகத் தின விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார் பேசியதாவது: ” இந்த பூமியில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உயிர் வாழ உடை, இடை, இருப்பிடம் அவசியம். அதேபோல், மனிதர்கள் அறிவியல் சிறந்தவர்களாக மாறுவதற்கு உறுதுணையாக இருப்பவை புத்தகங்களே. வந்தவாசி போன்ற பின்தங்கிய பகுதியில் வாழும் ஏழை மாணவ- மாணவிகள் அரசு நூலகங்களில் உள்ள பல்லாயிரம் நூல்களை எடுத்துப் படித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வெண்டும். இன்றைக்கு அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பலரும் அரசு நூலகங்களிலுள்ள நூல்களைப் படித்து, அதன் வழி உயர்ந்தவர்கள் என்பதை அறியும்போதுதான் நூலகத்தின் பயன் நமக்குத் தெரிகிறது.

தினமும் நேரமொதுக்கி, இரண்டு பக்கங்களாவது படிக்கிற நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மதிப்பெண் பெறுவதற்கான பாடப்புத்தகங்களைப் படிக்கிறீர்கள். இந்த சமூகத்தில் நீங்கள் உயர்ந்த மனிதர்களாக மாற வேண்டுமானால், பாடப் புத்தகம் தாண்டிய ஏனைய சமூகம், இலக்கியம், வரலாறு உள்ளிட்ட நூல்களையும் படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற ஒரு மனிதனால் இந்த சமுதாயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சமுதாயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால் தான், அதில் நாம் முன்னேறிச் செல்வதற்கான பாதையை வகுக்க முடியும்.ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இன்றைக்கும் என்றைக்கும் இருப்பவை புத்தகங்கள் தான்.” இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், ஓய்வுபெற்ற மிந்துறை அலுவலர் கே.சண்முகம், ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகப் புத்தகத் தின விழா சிறப்புக் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த அறிவியல், சமூகம், விளையாட்டு, மருத்துவம் , இலக்கியம், சிறுவர் கதைகள், கல்வி தொடர்பான நூல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் ஏப்ரல்27-ஆம் தேதிவரை ஒரு வார காலத்திற்கு நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் நூல்களை வாங்கும் வாசகர்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் தரப்படுகிறது.

நிறைவாக, மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார். உலகப் புத்தகத் தினவிழா நிகழ்வை மூன்றாம் நிலை நூலகர் ஜோதி, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

படக்குறிப்பு;

வந்தவாசி அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில், புதிய நூலக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கான அடையாள அட்டையை முன்னாள் மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.குமார், இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ், நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் உள்ளன.