மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார் என்று திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் இப்படி பேசுவார்: இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் தாக்கு
புதுக்கோட்டை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர் இளங்கோவன் இடையேயான கருத்து மோதல் முற்றி உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூட்டணி கட்சியான தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் வெள்ளை அறிக்கையோ கருப்பு அறிக்கையோ எது வெளியிட்டாலும் ஜெயலலிதா திரும்பி வந்துவிடுவாரா? என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் தலைமை தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்படுவதாக தி.மு.க தரப்பில் டெல்லி தலைவர்களிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே திருநாவுக்கரசரின் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம் தெரிவித்தார். அதோடு திருநாவுக்கரசர் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. கட்சியின் கருத்து அல்ல. திருநாவுக்கரசர் யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடுமையாக சாடி இருக்கிறார். புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இது பற்றி திருநாவுக்கரசர் பேசியதாவது:-

ஜெயலலிதா இறந்தது குறித்து பல்வேறு விவாதங்களை செய்வதால் அவர் திரும்பி வரப்போவதில்லை என்ற அர்த்தத்தில் தான் எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். நான் சொல்வதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கருத்து தான்.

அந்த கருத்து கட்சியின் கருத்து இல்லையா என்று கருத்து தெரிவிக்கும், விமர்சிக்கும் தகுதி கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக் போன்ற தலைவர்களுக்குத்தான் உண்டு. வேறு யாருக்கும் கிடையாது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை உடல் நலக் குறைவால் மறைந்த முதல்வரின் இறப்புடன் தொடர்புப்படுத்தக்கூடாது. அப்படி தொடர்புபடுத்தி பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இளங்கோவனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சித்து இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் – தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!