மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.

அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் பொறுப்பேற்றது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேசம் சார்பில் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளனர்.

ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு நீதி கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 5ம் தேதிக்குள், ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்கு தேசம் அறிவித்து இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘‘2019-ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராடி ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதனால் தெலுங்கு தேசத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. பாஜகவுடான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்து இருப்பதால் ஆந்திராவில் தெலுங்கு தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் மூத்த தலைவர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குள் மத்திய அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கெடு விதித்து இருந்தார். ஆனால் தெலுங்குதேசம் கேட்டபடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் நிலைமை தற்போது இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று இரவு கூறினார்.

இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே தெலுங்குதேசம் முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்களான அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவரும் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளனர்.