மதுரை 2ம் தலைநகர் ஆகிறதா ? தமிழகத்தில் அமோக ஆதரவு !!

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆகஸ்ட், 15ல், நம் நாளிதழில், முழு பக்க கட்டுரை வெளியானது. இந்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

தமிழ் வளர்த்த வரலாற்று பெருமைக்குரிய மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் அமைக்க, எங்களின் முழு ஆதரவு உண்டு. உலகின் எட்டாவது அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் உள்ளது. மதுரையை சுற்றி பசுமை சூழ்ந்த ஏராளமான கிராமங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சிக்குரிய நிறைய நிலப்பரப்புகள், நான்கு வழிச்சாலை போக்குவரத்து என, அனைத்து வசதிகளும் உள்ளன.தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெறும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.

பண்பாடு, கலாசார பின்னணி கொண்ட மதுரை, இலக்கியங்களில் தமிழ் சங்கம் வளர்த்த நகராக போற்றப்படுகிறது. பாண்டியர் காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. தமிழக நிலப்பரப்பு அடிப்படையில், மதுரை மையப் பகுதியாகவும், மக்கள் தொகை ரீதியாக இரண்டாவது பெரிய நகராகவும் உள்ளது.தமிழகத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு என, பல நகரங்கள் தொழில், வேலைவாய்ப்பு, கல்வி ரீதியாக, தொடர்ந்து வளர்ந்து வரும் போதிலும், தெற்கே உள்ள மதுரை அந்த அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை. உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், பல சைவ வைணவ திருக்கோவில்கள் மற்றும் சமணப் படுகைகள் உள்ள இடங்கள் அடங்கிய முதன்மை சுற்றுலா தலமாகவும் மதுரை விளங்குகிறது. தொழில் நகரமாக மாற மதுரைக்கு புதிய அங்கீகாரம் தேவை. மதுரையின் மேற்கு பகுதியில், பல இயற்கை வளங்கள் அடங்கிய மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு மற்றும் தெற்கு திசையில், மிகப்பெரிய கடல் வளமும் உள்ளன. மத்திய அரசு மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து, அதற்கான வளர்ச்சிப் பணிகளும் நடந்து வருகிறது. பொருளாதாரம், தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ரீதியாக, தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளன. இவற்றை நிர்வாக ரீதியாக சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும். ஆந்திரா, கர்நாடகாவை போல, தமிழகத்தையும் நிர்வாக வசதிக்காக, மதுரையை மையமாக வைத்து புதிய தலைநகர் உருவாக்கப்பட வேண்டும்.