மதுக்கடைகளை மூட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபை கூட்டத்தை கூட்டவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர் தினமான இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த முறை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிராம பஞ்சாயத்துகளின் செயலாளர்கள் கிராம சபை கூட்டத்தை முன்னின்று நடத்துவார்கள்.

இளைஞர்கள் முடிவு

முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள், ஊர் பிரச்சினைகளை முன்னின்று எடுத்துச்செல்லும் தன்னார்வமிக்க இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்கலாம். கிராமசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாயத்து அலுவலகம், ஊர் பொது இடம், பள்ளிக்கூடம், சமூகநலக்கூடம் போன்ற இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மதுக்கடைகளை அகற்றுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட தங்கள் கிராமங்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்மானமாக நிறைவேற்ற இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

அரிய வாய்ப்பு

இதுகுறித்து பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தொழிலாளர்கள் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே 1–ந்தேதி (இன்று) கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக தெரிவிப்பதற்கு கிராம சபை கூட்டங்கள் மிகவும் அரிய வாய்ப்பாகும்.

மக்கள் தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக தெரிவிக்க வகை செய்யும் இந்த கூட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு எந்த விளம்பரத்தையும் செய்யாதது கண்டிக்கத்தக்கதாகும். மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக புதிதாக மதுக்கடைகளை திறக்கும் முயற்சிகள் படுதோல்வியடைந்திருக்கின்றன.

மதுக்கடைகளை மூட தீர்மானம்

இந்த சூழலில் புதிய மதுக்கடைகள் திறப்பதை தடுக்கவும், ஏற்கனவே திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடவும் அரிய வாய்ப்பாக கிராம சபை கூட்டங்கள் அமைந்துள்ளன. மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக்கூடாது; ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பும் பொதுமக்கள் அதை வலியுறுத்தி இன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். கிராம சபை கூட்டங்களை பெயரளவில் நடத்தாமல் பெண்களும், இளைஞர்களும் மிக அதிக அளவில் கலந்துகொள்ளவேண்டும்.

பொதுமக்கள் முன்வரவேண்டும்

அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்கள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.