மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி பாராட்டு

ஊடகங்கள் மக்களின் மனசாட்சியாக விளங்குகின்றன, சமூக மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு மகத்தானது என தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பவள விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். பி்ன்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

‘‘75 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தினத்தந்தி நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பத்திரிகை துறையில் தினந்தந்தி முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

பத்திரிகை துறையில் இருக்கும் போட்டி ஆரோக்கியமானதே. தொழில்நுட்பம் ஊடகத்துறையில் இன்று பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தின் மனநிலையை ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்குகின்றன. சமூக மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. ஊடகங்கள் எப்போதும் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய வரலாற்றில் பத்திரிகைள் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் செய்திதாள்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தின. குறிப்பாக மாநில மொழிகளில் வெளியான பத்திரிகைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பத்திரிகைள் மக்களிடம் தேதபக்தியை ஊட்டின. இதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு அளப்பரிய பங்கை பத்திரிக்கைகள் செய்துள்ளன.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தற்போது ஊடகங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 2022ம் ஆண்டில் நாம் புதிய இந்தியாவை காண வேண்டும். மகாத்மா காந்தி கனவு கண்ட சுத்தமான இந்தியா இயக்கம் உள்ளிட்டவை குறித்தும் பத்திரிகைகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடி தமிழில் வணக்கம் கூறி உரையை தொடங்கினார்.