மக்களாலும் அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்டமுன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்களும்………

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம் போன்ற ஏனைய பகுதிகளிலும் அங்கங்களை இழந்தும் ,உடலெங்கும் “செல்” உலோகத் துண்டுகளைத் தாங்கிய வண்ணமும் வாழ்ந்துவரும் முன்னாள் போராளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் துயரங்களோடு வாழ்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் “லங்காஸ்ரீ” செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் மிகவும் உருக்கமாக பல விடங்களை பகிர்ந்துள்ளார்கள். மேற்படி பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ள விபரங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவிகளுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நம்புகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து எமது உறவுகள் தாயகத்தில் துன்பத்தில் வாடும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துங்கள் என்ற எண்ணத்தோடு அனுப்பிவைக்கும் நிதி அவர்கள் கைகளுக்கு போய்ச் சேருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அரசியல்வாதிகள் சிலரும் சேவை நிறுவனங்கள் என்று தங்களைஅறிமுகம் செய்துகொள்ளும் அமைப்புக்களும் அந்தபெரும் நிதியைக் கையாடுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களும் மேற்படிமுன்னாள் போராளிகளால் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டன.

அந்த முன்னாள் போராளிகள் திறந்த மனதுகளுடன் அந்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்லிய ஒளிப்பதிவுக் காட்சிகள் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் காதுகளுக்கும் கண்களுக்கும் சென்றடைந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.அந்த வார்த்தைப் பகிர்வுகள் எமது நோகடித்திருக்கும். ஈட்டிகளால் எமது நெஞ்சுகள் குத்தப்படுவது போன்ற உணர்வை நாம் நிச்சயமாகப் பெற்றிருப்போம்

அன்பர்களே! மேலும் முன்னாள் போராளிகள் நல்ல சுகதேகிகளாக இல்லை என்ற செய்தியையும் நாம் அறிகின்றபோது எமது கண்களில் நீர் வழிந்தோடுவதை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அவர்களில் பலர் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்டு தங்கள் வாழ்க்கையை “முடித்துக்” கொண்டார்கள். தங்கள் மக்களின் விடிவிற்காகவும் சுபீட்சத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் கைகளில் ஆயுதத்தையும் மனதில் விடுதலை உணர்வையும் தாங்கி நின்றஅந்த முன்னாள் போராளிகள் இன்று வாழ்வதில் நம்பிக்கையை இழந்தவர்களாக இருப்பதை எமது சமூகம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எம்மைப் பொறுத்தளவில் எமது புலம் பெயர் உறவுகளும் வடக்குமாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஆகியோர் மட்டுமே தற்போது தாயகத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் நலன்களை கவனிக்கும் சில அரசியல்வாதிகளாக உள்ளார்கள். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களில் திரு சிறிதரன் சிவஞானம் அவர்களும் சிறிது அக்கறை எடுத்து முன்னாள் போராளிகளின் நலன்களை கவனித்து வருகின்றார். இவ்வாறான நிலையில் முன்னர் போர்க்காலம் கடந்து, 2009ம் ஆண்டிற்கு பின்னர். இராணுவக் கொடியவர்களால் சேதப்படுத்தப்பட்ட “மாவீரர் துயிலும் இல்லங்கள்” என்னும் புனிதமான இடங்கள் தூர்ந்து போன நிலையில் தற்போது அந்த கல்லறைகளையும் தூபிகளையும் அங்குள்ள மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் முன்னாள் போராளிகளும் சேர்ந்தே புனரமைத்து வருகின்றனர் என்ற செய்தியை அறிகின்ற போது, மக்களும் அரசியல்வாதிகளும் எமது முன்னாள் போராளிகளையும் மாவீரர்களையும் கைவிட்டு விட்டார்களா என்ற கேள்வியே மிகவும் உருக்கத்தோடு எமது முன்னாள் தோன்றிநிற்கின்றன.