மகளிர் காங்கிரஸ் போராட்டம்: பிரதமருக்கு வளையல் அனுப்பி ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதா?

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்து ராணுவ வீரர்களை கொன்று தலை துண்டித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி, அவருக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை மகளிர் காங்கிரசார் இன்று (திங்கட்கிழமை) நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

பலம் வாய்ந்த பிரதமர்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பலம் இல்லாத பிரதமரை நாடு பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் தற்போது பலம் வாய்ந்த பிரதமரை பெற்று இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்களின் உயிரை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. அதையும் மீறி பாகிஸ்தான் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

பாகிஸ்தானின் இந்த செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க மத்திய அரசு முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை வளையல் அனுப்பி கொச்சைப்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொள்கிறேன். ராணுவ வீரர்களின் தியாகத்தை இந்தளவு யாராலும் கொச்சைப்படுத்த முடியாது.

விவசாயிகளுக்கு எதிரான தோற்றம்

பா.ஜனதா, விவசாயிகளுக்கு எதிரான கட்சி கிடையாது. பட்ஜெட்டில் கூட ரூ.10 லட்சம் கோடி பயிர்க்கடனுக்காக ஒதுக்கப்பட்டது. பயிர்பாதுகாப்பு திட்டம் விவசாயிகளுக்கு பெரும்பலன் தரும் திட்டம். இதனால் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை குறைந்து வருகின்றது. ஆனால் சமீபகாலமாக பாரதீய ஜனதா கட்சி விவசாயிகளுக்கு எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறோம். அதற்காக எப்போதும் போராட்ட களத்தில் இருக்கக்கூடாது. மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் போது எதையும் கூறவில்லை. ஆனால் வணிகர்கள், பொதுமக்கள், சமூகவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளை அழைத்து போராட்டம் நடத்தப்போவதாக கூறியதால்தான் தமிழகத்தை போராட்ட களமாக மாற்றக்கூடாது என்பதால்தான் கருத்து தெரிவித்தேன். இதை அரசியலாக்க விரும்பவில்லை.

இடஒதுக்கீடு பிரச்சினை

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகளை ஆராய்ந்துதான் அவசர சட்டம் கொண்டு வரமுடியும். ஆனால் எல்லா தீர்ப்புக்கும் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்க கூடாது. இடஒதுக்கீடு பிரச்சினை மாநில அரசினால் தவறாக எடுத்து செல்லப்பட்டு உள்ளது.

இந்த பிரச்சனையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை மாநில அரசு தெளிவாக புரிந்து கொள்ளாமல் போராட்டத்திற்கு வழிவகை செய்து உள்ளது என ஐகோர்ட்டு நீதிபதியே சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த பிரச்சினை என்றாலும் காரணமின்றி மத்திய அரசை குறை சொல்வது இங்கு வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.