போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

‘இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப் போரின் போது, போர்க்குற்றங்கள் நடந்தன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டு, தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அந்த தீர்மானங்களில் இருந்து விலகுவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த 19ம் தேதி அறிவித்தார்.

 

இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின், 43வது அமர்வு ஜெனிவாவில் துவங்கியது. அதில் நேற்று, இலங்கையின் வெளி விவகாரத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசியதாவது:
ஐ.நா.,வின் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளவை, இலங்கை அரசியல் அமைப்பின் கட்டமைப்பிற்குள் செயற்படுத்த முடியாதவையாக உள்ளன. மேலும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளன.

இந்தத் தீர்மானங்களுக்கு அப்போதைய அரசு, அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவில்லை; நாடாளுமன்றத்திலும் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. அப்போதைய ஜனாதிபதியிடமும் ஆலோசனை பெறவில்லை. இப்படி, ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்மானத்தை அப்போதைய அரசு ஏற்றுள்ளது.
நடைமுறைக்குச் சாத்தியமற்ற, அரசியல் அமைப்பிற்கு எதிரான இந்தத் தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு விலகுகிறது.

இந்தத் தீர்மானம் தொடர்பான விவாதம், நாளை நடைபெறவுள்ளது. இதில், ஐ.நா.,வின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கவுள்ளனர். மேலும், மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் இலங்கையின் நிலைப்பாடு குறித்து உரையாற்றவுள்ளனர்.
அப்போது, ‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கேள்வி எழுப்புவர்; இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தருவர்’ என, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர்.