போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும்-பிரியங்கா வாத்ரா

போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும் அராஜகத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் போலீஸ் அதிகாரி தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க காங்., பொதுச்செயலர் பிரியங்காவை, லக்னோ போலீசார் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, கட்சித் தொண்டரின், ‘பைக்’ கில் சென்றார். அதையும் போலீசார் தடுத்ததால், நடந்து சென்றார்.

இது குறித்து பிரியங்கா கூறுகையில், ‘என்னிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்; கழுத்தை நெரித்தனர்’ என்றார். இதனை உத்தர பிரதேச பெண் போலீஸ் அதிகாரி மறுத்தார். ‘கழுத்தை நெரிக்கவில்லை; என்னுடைய கடமையைத் தான் செய்தேன்’ எனக் கூறினார்.