போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடுவதாகவும் பாஜ தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள ரபின்திர பாரதி பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகிறார்கள். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கம்?பெண்கள் இப்படி இருந்தால், அவர்களுடன் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும். இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு திரிணாமுல் காங்., அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் காட்டமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முதலில் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாக உள்ளாரா என்பதை அறிய வேண்டும். அவர் ஒரு நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான மனிதர். இத்தகைய நபரை மாநில தலைவராக்கியது, பாஜ.,வின் தரத்தை காட்டியுள்ளது. மேற்குவங்க மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும், என்றார்.