பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

latest tamil news

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது: பொருளாதார இலக்குகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒருங்கணைந்து செயல்பட வேண்டும். இப்போது, கொடூர தொற்று வியாதியால், உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள், குறிப்பாக, ஏழை நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடியை குறைக்க, ஜி – 20 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களின் நலனுக்காக, உலகம் முழுதும் ஒன்றாக செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளை, அனைத்து நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

சீன அதிபர், ஜின்பிங் பேசியதாவது: கொரோனா வைரஸ், உலகளவில், இதுவரை இல்லாத அளவில், சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சர்வதேச அளவில் போர் தொடுக்க வேண்டும். கொரோனா பரவலுக்கு எல்லைகள் கிடையாது. இது, நம் பொது எதிரி. இதற்கு எதிராக, நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

latest tamil news

இந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர், புதின் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். ‘கொரோனா பரவுவதை தடுக்க இணைந்து செயல்படுவது என, ஜி – 20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்தனர். இந்த கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காக்க, உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பை நாடுவது என, முடிவெடுக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை, தடுப்பு மருந்து, மற்ற மருந்துகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வினியோகிப்பது.

பாதிப்பு குறைவான நாடுகள், அதிக அளவில் உதவுவது என, முடிவு செய்யப்பட்டது. ஜி – 20 அமைப்பில், அர்ஜென்டினா,ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா. இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.