பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று கூறியதாவது:-

அணிகள் இணைப்பு என்பது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி. இணைப்பு முயற்சியில் எந்த தரப்பினரும் சசிகலாவை பற்றி மன்ற கூட்டத்தில் வாய் திறக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவேண்டும் என வைத்திலிங்கம் கருத்து கூறி இருக்கிறார் என்றால் அதை தலைமை கழகத்துக்கு வெளியே அவர் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.

பொதுக்குழு கூட்டப்படும் போது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். வைத்தியலிங்கத்துக்கு ஒரு ஓட்டு, எனக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான். ஒரு பொறுப்பாளருக்கு ஒரு ஓட்டு தான். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.

அரசியலில் அவரவர்களுக்கு ஒரு ஆசை உண்டு. அவரவர் விருப்பத்துக்கேற்ப நிறைவேற்ற எல்லோரும் துணை நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் அது நிறைவேறாமல் போகும் போது கருத்துக்களை சொல்வதும் ஒரு தவறான நடைமுறை என்று நான் கருதுகிறேன்.

பிடிக்காத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம். இப்போது பிடித்த பொண்டாட்டியாகி விட்டார். அதனால் இப்போது கால்பட்டாலும் குற்றமில்லை. கைபட்டா லும் குற்றமில்லை. அணிகள் இணையும் முன்பு ஒருவரையருவர் குற்றம் சாட்டியதும், அணிகள் இணைந்த பிறகு அண்ணன்- தம்பி என்று கூறி கொள்வதும், அரசியலே இதுதான் என்னும் போது மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு வர வாய்ப்பு இல்லை.

சண்டை போட்டவர்கள் கூடிக்கொள்வதில்லையா? சண்டை போட்டவர்கள் ஒன்று கூடினால் என்ன தவறு? சொன்ன கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்வது தவறா? சண்டைக்காரர்கள் சண்டைக்காரர்களாகவே இருக்க வேண்டுமா? அவர்கள் ஒன்றாக கூடுவது சகஜம்தான். நாங்கள் ஒன்று கூடியிருப்பதை பார்த்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். எதிர்க்கட்சியினர் வேண்டுமானால் மாற்றுக் கருத்து சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.