பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மத்திய, பா.ஜ., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தேசிய கல்வி கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், ‘நீட்’ தேர்வு உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் போராட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும், பா.ஜ.,வினர் இணைய தளத்தில் திருவள்ளுவரை காவி உடையில் படத்தை வெளியிட்ட போது, கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும், ‘தமிழகத்தை காவி மயமாக்க விட மாட்டோம்’ என்றும் பேசி வருகிறார். இதனால், தி.மு.க.,வினர் காவி நிற உடை அணிவதை கூட தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு, சென்னையில், ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி வாழ்த்து பெற்றார். அப்போது, அவர், தி.மு.க., கரை வேட்டியில் செல்லாமல் காவி வேட்டி கட்டியிருந்தார்.
இந்த புகைப்படத்தை, தன் பேஸ் புக் பக்கத்தில் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்களுக்கு சளைக்காமல் பதிலடி கொடுக்கும், தி.மு.க.,வினர், அமைதி காத்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் இருக்கும் போது, கோவிலுக்கு மாலை போடுவது, அக்னி சட்டி, மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பிரச்னை இல்லை. ஆனால், பகுத்தறிவு கட்சி என அறியப்படும், தி.மு.க.,வில் காவி வேட்டி கட்டிக் கொண்டு போகலாமா. அப்படி கோவில் மாலை அணிந்திருந்தால், வேறு வேட்டியில் சென்று வாழ்த்து பெற்று இருக்கலாம். இப்படி காவி வேட்டியில் சென்று பலர் கிண்டல், கேலிகளை தவிர்த்திருக்கலாம் என, அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.