பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும்.

இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ‘எழிலன்’ எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவிதான் அனந்தி சசிதரன்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக, பணிபுரிந்து வந்த அனந்தி, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 2013ம் ஆண்டு, தனது பணியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஊதியமற்ற விடுமுறை பெற்றிருந்தார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சபையின் உறுப்பினராகப் பதவியேற்றார். 2017ம் ஆண்டு வடக்கு மாகாண அமைச்சரானார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, கைத்தொழில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல அமைச்சுகள் அப்போது அவருக்கு வழங்கப்பட்டன.

இப்போது வடக்கு மாகாண சபை கலைந்து விட்டது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அச்சபையின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதில் அமைச்சராகப் பதவி வகித்த அனந்தி சசிதரன், மீண்டும் தனது அரச பணிக்கு திரும்பியுள்ளார்.

“கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வட மாகாண சபை கலைந்தது. 27ம் தேதி மீண்டும் எனது தொழிலில் இணைந்து கொண்டேன்,” என்று, அனந்தி சசிதரன் பிபிசி தமிழிடம் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளராக இணைந்து கொண்டுள்ள அனந்தி சசிதரனின் சொந்த இடம் காங்கேசன்துறை. பின்னர் கிளிநொச்சியிலும் வசித்தார்.

தற்போது தனது மூன்று பெண் குழந்தைகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சுழிபுரம் – பண்ணாகம் பிரதேசத்தில், வாடகை வீடொன்றில் அவர் வசித்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“அரசியலில் நான் பணம் சேர்க்கவில்லை. அதனால், வருமானத்துக்காக மீண்டும் எனது அரச தொழிலில் இணைந்துள்ளேன்,” என்று கூறும் அனந்தி, அலுவலகத்துக்குச் செல்வதற்காக தினமும் பேருந்தில் பயணிக்கின்றார்.

1992ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் முகாமைத்துவ உதவியாளராக அரச நியமனம் பெற்றுக் கொண்ட அனந்தி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பணிபெற்றார்,

பிறகு 1998ம் ஆண்டு முல்லைத்தீவுக்கு இடம்மாற்றம் பெற்றார். அதன் பிறகு 2003 தொடக்கம் 2013ம் ஆண்டுவரை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அவர் பணிபுரிந்து வந்தார்.

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘ஈழத் தமிழர் சுயாட்சி கழகம்’ எனும் பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்த அனந்தி சசிதரன், அந்தக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

“போரில் எங்கள் வீடு சேதமடைந்தது. ஆனால், புதிய வீடொன்றை இதுவரை அரசாங்கம் கட்டித்தரவில்லை. போரினால் எங்கள் பொருளாதாரத்தை முற்றிலுமாக வீழ்ந்து, வெறுங் கையுடன்தான் வந்தோம்,” என்கிறார் அனந்தி சதிதரன்.

ஓர் அமைச்சராக பதவி வகித்து விட்டு, பணிக்கு திரும்பியுள்ள உங்களுடன், அலுவலகத்திலுள்ளவர்கள் எப்படிப் பழகுகின்றனர் என்று கேட்டதற்கு, “அங்குள்ளவர்களில் பலர் என்னுடன் முன்னர் பணியாற்றியவர்கள்தான். எனவே, அவர்கள் என்னுடன் சகஜமாகவே பழகுகின்றனர்,” என்றார்.

எவ்வாறாயினும் அனந்தியின் அரசியல் பயணம் நின்று விடவில்லை.

“அடுத்த தேர்தலில் களமிறங்குவேன். அரசியல் பயணத்தில் தொடர்ந்தும் இருப்பேன்” என்கிறார் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்.