பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 ஆக உடைந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரு அணிகளும் தினந்தோறும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்தநிலையில், திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்தவருமான க.பாண்டியராஜன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதில் அமைச்சர் ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கருத்து சிறந்த நகைச்சுவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
முட்டுக்கட்டையா?
அ.தி.மு.க.வின் இரு அணிகளின் இணைப்பு விஷயத்தில் நான் முட்டுக்கட்டை போட்டதாக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதை முற்றிலும் மறுக்கிறேன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதில் 123 எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை காப்பாற்றி விட்டோம்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற 2 சதவீதம் பேரும் எங்களுடைய அன்பு சகோதரர்கள் தான். அவர்களும் கட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்று தான் பல முறை சொல்லி வருகிறோம். திரும்பி வாருங்கள், உங்களுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய முக்கியத்துவம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம்.
கட்சிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?
நானே முன் உதாரணமாக என்னிடம் உள்ள நிதித்துறை மற்றும் சில இலாக்காக்களை தியாகம் செய்ய தயாராகவே இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அம்மாவின் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றி, இரட்டை இலை சின்னத்தை மீட்க போராடி வருகிறோம். ஆனால் பிரிந்து சென்றவர்கள் தான் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அம்மா போராடி பெற்று தந்த இரட்டை இலை சின்னத்தை தற்போது முடக்கியிருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தைக்கு எங்கள் கதவு திறந்தே இருக்கிறது. வாருங்கள், பேசுவோம் என்று தான் சொல்லி வருகிறோம். இப்படி நாங்கள் சொல்லி வரும் நேரத்தில் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார். அவர் யார்? அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? கட்சிக்காக ஏதாவது தியாகம் செய்து இருக்கிறாரா? நான் கட்சிக்காக 7 முறை சிறை சென்று இருக்கிறேன். பாண்டியராஜன் கட்சிக்காக ஒரு துரும்பையாவது எடுத்து போட்டு இருப்பாரா? நான் முட்டுக்கட்டை போடுவதாக அவர் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.
குளம் தேடி பறக்கும் கொக்கு
கட்சிக்காக சிறை சென்று, போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் இதை சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன். கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்கள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. பாண்டியராஜனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எங்கள் கட்சியை பற்றி பேச எந்த உரிமையும், முகாந்திரமும் இல்லை.
அவர் பல கட்சிக்கு சென்று இங்கு வந்தவர். குளம் தேடி பறக்கும் கொக்கு போன்றவர். அவரை பற்றி மக்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் இப்போதும் பிரிந்து சென்றவர்களை அழைக்கிறோம். வாருங்கள், பேசலாம். காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.