பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்!!

இந்த வயதில் குழந்தைகளுக்குப் பாராட்டு ரொம்பப் பிடிக்கும். அவர்கள், க்ரேயா ன்ஸால் சுவரில் இரண்டு கோடுகள் போட்டாலும், கைதட்டிப் பாராட்டுங்கள். நிறங்களையோ, வடிவங்களையோ அவர்கள் சரியாகச் சொல்லும் போது உடனடியாக ஏதாவது பரிசு கொடுங்கள். அது உங்கள் முத்தமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், பரிசை உடனே கொடுங்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு,‘நான் இதைச் சரியாகச் செய்திருக்கிறேன்’ என்கிற எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதியும்.
எல்லா பெற்றோர்களும் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது. 2-3 வயதுக்குள் இருக்கிற குழந்தைகள் துறுதுறுவென ஓடுவார்கள், வேகவேகமாக நடப்பார்கள்.

ஆனால், அவர்களுடைய குட்டிப் பாதங்களை உற்றுப் பார்த்தீர்களென்றால், அவை முழுமையாகத் தரையில் பதிந்திருக்காது. இப்படித் தரையில் பாதங்கள் பட்டும்படாமல் நடந்துகொண்டிருக்கிற குழந்தைகள் தண்ணீரிலும் விளையாடுவார்கள். பக்கெட்டில் இருக்கிற தண்ணீரைக் கண்டால் பொடிசுகள் குஷியாகிவிடுவார்கள் என்பது தெரிந்த விடயம் தானே! அப்படி பக்கெட்டில் இருக்கிற தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை, தவறி தலைக்குப்புற தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். அப்படி விழுந்தால், அவர்களால் கத்தவும் முடியாது தண்ணீருக்குளிருந்து வெளியே வரவும் தெரியாது. விளைவு… நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது அல்லவா? அதனால், 2-3 வயதுக் குழந்தை இருக்கிற வீடுகளில் குளியலறையின் தாழ்ப்பாளை எப்போதும் பூட்டி வையுங்கள். அது முடியவில்லையென்றால், பக்கெட், டிரம்களில் தண்ணீர் பிடித்து வைக்காமலாவது இருங்கள்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பார்கள். நன்கு மென்று சாப்பிடக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயதும் இதுதான். முக்கியமாகப் பட்டாணி, காராமணி போன்ற கொஞ்சம் பெரிய அளவிலான பயறுகளை நன்றாக மென்று விழுங்கச் சொல்லிக் கொடுங்கள்.

உடைந்த பொம்மைகள், பட்டன் பேட்டரிகள், பென்சில், க்ரேயான்ஸ் என்று குழந்தைகளைக் காயப்படுத்தும், அவர்கள் மூக்கில் போட்டுக்கொள்ளக்கூடிய, விழுங்கி விடக்கூடிய பொருள்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனுடன் இப்போது இந்தத் தகவலையும் சேர்ததுக் கொள்ளுங்கள். பாதங்கள் தரையில்படாமல் நடக்கிற வயது இது என்பதால்,

அவர்கள் ஓடியாடுகிற இடங்களில் அல்லது அவர்கள் கைக்கெட்டும் உயரத்தில் வெந்நீர், பால் என சூடானவற்றை வைக்காதீர்கள். தப்பித் தவறி அவை குழந்தைகள் மீது பட்டுவிட்டால், ஆழமான கொப்புளங்கள் ஏற்பட்டுவிடும்… கவனம்.

வெளிநாடுகளில் குழந்தைகள் காரில் ஏறியவுடன் அவர்களுக்கு ஸீட்பெல்ட் அணிவித்துவிடுவார்கள். கண்ணாடியை ஏற்றி இறக்கும்போது கையைவிடுவது, கியரைத் தூக்கிவிடுவது, கார் ஓட்டுகிற அப்பாவின் மடியில் உட்கார அடம்பிடிப்பது என்றெல்லாம் காரை, குழந்தைகளின் விளையாட்டுத்திடலாக மாற்றாதீர்கள். இவை ஆபத்தாக மாறலாம். அப்பாவின் மடியில் குழந்தை உட்கார்ந்து கொண்டிருக்கையில் சடன் பிரேக் போடவேண்டிய நிலைமை வந்தால், காரின் ஸ்டீயரிங் குழந்தையின் நெஞ்சில் இடித்துவிடும், ஜாக்கிரதை.