பெண்கள் தான் பலாத்காரத்திற்கு அழைக்கின்றனர்: ஆசிரியை பேச்சால் சர்ச்சை

சட்டீஸ்கரின் ராய்பூர் பகுதியில் மத்திய அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் உயிரியல் ஆசிரியை, ‘பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர்’ என, பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இரு பாலரும் படிக்கும் பள்ளியின் ஆசிரியையான ஸ்நேலதா ஷங்வார், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ‘பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் ஜீன்ஸ் அணிவது, லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இரவு 8.30 மணிக்கு மேல் 11 வகுப்பு மாணவியர் பலர் வெளியில் வருவதை நான் பார்த்துள்ளேன். அவர்களிடம் வீட்டிற்கு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளில் தான் உள்ளது. நிர்பயா விஷயத்தில் என்ன தவறு நடந்தது. அவர் இரவில் வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும். அவர் தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

மருத்துவம் படிக்கும் மாணவி, தனது கணவன் அல்லாத நபருடன் வெளியில் வந்துள்ளார். சமூகத்தின் மீது நாம் தவறு சொல்ல கூடாது. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என சொல்லும் நிர்பயாவின் பெற்றோர் தங்களின் பெண்ணை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இப்போது அந்த ஆண்கள் தூக்கில் போடப்பட உள்ளனர்’ என, பேசி உள்ளார்.

இதனை பதிவு செய்து, தலைமை ஆசிரியரிடம் போட்டுக் காட்டி உள்ளனர். இப்போது இந்த விவகாரம் சர்சசையாக்கப்பட்டதை அடுத்து அதற்கு விளக்கம் அளித்துள்ள ஆசிரியை, ‘பள்ளி மாணவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு முறையான சீருடையை அணிவித்து அனுப்பும்படி பெற்றொர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என்பதையே கூறினேன். மாணவியர் லிப்ஸ்டிக் அணியக் கூடாது என்பதை கூறுவதற்கே அவ்வாறு கூறினேன்’ என்றுள்ளார்.