பெண்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பெண்கள் எதிர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு எதிராக நடிகையும், பா.ஜ., உறுப்பினருமான காயத்ரி ரகுராம் செய்த டுவீட்டில், “திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள். நவ.,27 காலை 10 மணிக்கு மெரினாவிற்கு தனியாக வருகிறேன். அப்போது திருமாவளவன் என்னை நேரில் மிரட்ட தயாரா?” என பகிரங்க சவால் விடுத்திருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் திருமா இந்து கடவுள்கள் குறித்த தனது பேச்சை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து காயத்ரி ரகுராமின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையில், அதே சமயம் காயத்ரியின் பெயரை குறிப்பிடாமல் பேசி, டில்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ” விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்து தர்மத்தில் உள்ள குறைபாடுகளை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கத்துக் குட்டிகளுக்கு தெரியாது. குடித்து விட்டு கார் ஓட்டுகிற தற்குறிகளுக்கு தெரியாது. பெண்களை வைத்து தொழில் செய்து, கைதாகி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாகி, ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த தற்குறிகளுக்கு தெரியாது. அவர்களுக்கு என்ன தெரியும்? அவிழ்த்துப் போட்டு, ஆடைகளை அகற்றி விட்டு நடிப்பது என்பது அவர்களுக்கு தொழில். ஆகவே, அது அவர்களுக்கு கலையாக தெரியலாம்.

அதை கலை என்ற அடிப்படையில் தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். அந்த கற்றுக் குட்டிகளுக்கு விடை சொல்லப் போகிறோம் என்ற முறையிலே, அவர்களுக்காக நாம் நமது சக்தியை விரயம் ஆக்குவது என்பது வீண் என என்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற தோழர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள். நாம் மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற பதர்களுக்கு பதில் சொல்வதற்காக காலத்தை வீணடிக்க வேண்டாம். பா.ஜ., ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே என் பேச்சை சர்ச்சை ஆக்குகின்றன” என்றார்.

திருமாவளவனின் பொத்தாம் பொதுவான நடிகைகளைப் பற்றிய இந்த பேச்சிற்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக திருமாவளவன் மீத பெரம்பலூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.