பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் விருது குறித்து தனது வாழ்த்துக்களை வைரமுத்துவிற்கு தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்டவரும், தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமான பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவில்,‛ ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது’ என குறிப்பிட்டார்.

அதே போல் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, உள்ளிட்ட பல பெண்களும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவதை எதிர்த்து டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான ஓஎன்வி விருது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. அநேகமாக அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது வாபஸ் பெறப்படலாம் என தெரிகிறது.