பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்

புதுச்சேரியில் மாட்டு வண்டியில் அமர்ந்து முதல்வர், அமைச்சர். ஆகியோர் ஊர்வலமாக வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அரசின் செயல்பாட்டின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையின் அருகில் துவங்கியது. துவக்கத்திலேயே மாட்டு வண்டியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்து வந்தனர்.

மொத்தம் 8 மாட்டு வண்டிகள் அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 68 டாலராகதான் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 124 டாலர் விற்றபோதே ரூ. 60க்குதான் பெட்ரோல் விலை இருந்தது. ரூ. 52க்கு டீசல் இருந்தது. தற்போது உள்ள பேரல் விலைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 30க்கு தர இயலும்.

ஆனால் விலையை குறைக்காமல் மக்கள் தலையில் மத்திய அரசு சுமையை ஏற்றுகிறது. மேலும்பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பொருளாதார வளர்ச்சி குறையும். காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது பொருளாதார வளர்ச்சி மிகவும் சரிந்துள்ளது.

நிதி பெற பல முறை மத்திய பாஜக அரசிடம் முட்டி பார்க்கிறோம். பிரதமர் மோடி சந்திக்கும் போது சிரிக்க மட்டுமே செய்கிறார். நியாயமான நிதி கேட்டாலும் முடிவு பூஜ்யமாகதான் உள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் தற்போது வெளியேற தொடங்கியுள்ளன. எதிர்க்கவும் தொடங்கியுள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று, பிரதமராக ராகுல் பொறுப்பேற்பார் என்று தெரிவித்தார்.