புதுமைக்கு எப்போதும் ஆதரவு உண்டு: கிருஷ்ணா நேர்காணல்

‘‘என் முதல் படத்தில் இருந்து இதுவரை ஒரு ரசிகனின் மனநிலையில் இருந்தே கதை கேட்டு நடித்து வருகிறேன். அதேபோல, தற்போதைய சினிமாவின் போக்கை பார்க்கும்போது முடிவில் கதை மட்டும்தான் ஜெயிக்கிறது. கதையை நம்புவதால்தான் ஒரே நேரத்தில் சோலோ ஹீரோவாகவும், இரட்டை ஹீரோக்கள் படத்திலும், மல்டி ஸ்டார்ஸ் படங்களிலும் கவனம் செலுத்த முடிகிறது’’ என்கிறார் கிருஷ்ணா.

விரைவில் வெளிவரும் ‘பண்டிகை’ படத்தைத் தொடர்ந்து ‘கிரகணம்’, ‘வீரா’, ‘விழித்திரு’, ‘களரி’ என்று அவரது நடிப்பில் வரிசையாக படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. அவருடன் ஒரு நேர்காணல்..

திருவிழா, பண்டிகை என்றால் கொண்டாட்ட மான மனநிலை இருக்கும். நீங்கள் நடித்த ‘பண்டிகை’ படத்தின் டிரெய்லர், போஸ்டர்களை பார்க்கும்போது ஆக்‌ஷன் களம் மாதிரி தெரிகிறதே?

ஊர்ல இளவட்டப் பசங்க நாலு பேர் சேர்ந்து பேசிக்கும்போது ‘இன்னைக்கு சாயங்காலம் சண்டை இருக்கு வந்துடு’ன்னு சொல்வாங்க. ஆனா, இந்தப் படத்தில, ‘சாயங்காலம் பண்டிகை இருக்கு வந்துடு’ன்னு சொல்லியிருப்போம். இது தெருச் சண்டை பத்தின படம். சண்டைகளின் பண்டிகைன்னும் சொல்லலாம். நான் இதுவரை நடித்த படங்களில் அதிகம் மெனக்கெட்டு நடித்த படம். ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் 17 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ரிசல்ட் நல்லா இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியா இருக்கோம்.

அண்ணன் விஷ்ணுவர்தன் மாதிரி அனுபவம் உள்ளவர்களோடு பணிபுரிகிறீர்கள். புதிய இயக்குநர்களோடும் இணைகிறீர்களே?

ஒரு படம் இயக்கினாலும், 10 படங்கள் இயக்கியிருந்தாலும் அவர் இயக்குநர்தான். நிறைய படங்கள் பண்ணுபவர்கள் அனு பவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். புதியவர்கள் அடிபட்டுக் கற்றுக்கொள் கிறார்கள். ‘பண்டிகை’ படத்தை அடுத்து ‘வீரா’, ‘களரி’ என்று நான் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கதை பிடித்திருக்கிறதா என் பதை மட்டும்தான் பார்ப்பேன். கதையைக் கேட்கும்போதே உள்ளுக்குள் படம் ஓடும். ‘ஓ.கே. கமிட் ஆகலாம்’ என்று அலாரம் அடித் தால், உடனே சம்மதம் தெரிவித்துவிடுவேன். மற்றதை இயக்குநர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை கதைதான் எனக்குள் விதைக்கிறது.

2017 ரிலீஸ் படங்கள் அதிகமாக இருக்கிறதே?

ஆமாம். இப்போதான் ‘களரி’ படப்பிடிப்பு முடிந்தது. நிறைய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கோணத்துல இருக்கும். ‘பண்டிகை’ படத்துக்குப் பிறகு வெளிவரும் ‘கிரகணம்’ படம், 2 நிமிடங்களுக்குள் நடக்கிற கதை. அதுக்குள்ள ஒரு ஹீரோ, ஹீரோயினோட கதாபாத்திரங்கள் என்ன செய்கிறது என்பதை பிரதிபலிக்கும். மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் நடக்கும் கதைக்களம்தான் ‘விழித்திரு’. இதில் மல்டி ஸ்டார்ஸ் நடிக்கிறோம். வட சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞன் ரவுடியாக மாற நினைக்கும் களம் ‘வீரா’. கொச்சின்ல வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை ‘களரி’. இப்படி எல்லாமே வித்தியாசமான களம், கதாபாத்திரம் என்பதால் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொள்கிறேன்.

‘அஞ்சலி’, ‘இருவர்’ என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீங்கள். சினிமாவில் அப்போதைக்கும் இப்போதைக்கும் என்ன வித்தியாசம்?

அப்போதெல்லாம் ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது படங்களை எண்ண முடிவதில்லை. ‘வெள்ளிக்கிழமை வந்த ஏழு படங்கள்ல உங்க படம் ரொம்ப நல்லா இருக்கு’ன்னு ஒரு ரசிகன் சொல்லும்போது, அதைவிட ஆனந்தம் வேறு இல்லைன்னு நினைக்கும் சூழலில் இருக்கிறோம். ஒன் றிரண்டு படங்கள் வெளியான வெள்ளிக்கிழமை களில் இப்போது 8 படங்கள் வெளிவரு கின்றன. அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. பைரசி இல்லை. சின்னத்திரை நாடகங்கள் இல்லை. இத்தனை சிரமங் கள், இடையூறுகளுக்கு நடுவில் படம் பண்ணுகிறோம். அதையும் சிலர் புரிந்துகொள் ளாமல் இணையம் வழியே பார்க்கிறார்கள். இதுபோன்றவற்றை மக்களே புரிந்துகொண்டு தவிர்க்க வேண்டும்.

ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்கள் வந்தாலும் கிருஷ்ணாவுக்கு ‘கழுகு’ மாதிரி ஒரு படம் மீண்டும் அமையவில்லையே?

புதிதாக ஒரு விஷயம் பண்ணினால் மக்களின் அரவணைப்பு, ஆதரவு கண்டிப்பா இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் ‘கழுகு’ படம். அதை எடுத்து முடிச்சதும், ‘இது என்ன டிஸ்கவரி சேனல் படம் மாதிரி இருக்கு’ன்னு பலரும் சொன்னாங்க. அதையெல்லாம் கடந்து ரிலீஸ் பண்ணினோம். இன்றைக் கும் அது எனது அடையாளத்தை ரீவைண்ட் பண்ணிக்கொடுக்குது. இது நல்லது தானே.

அடுத்தக் கட்டம்?

‘சேதுபதி’ படத்தை இயக்கிய அருண் குமாரின் உதவியாளர் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். அதோடு ஒரு இந்தி கதையின் ரீமேக் படத்திலும் நடிக்கவுள்ளேன். இதற்கு நடுவே, எல்லோரும் ஷாக் ஆற மாதிரி ஒரு புரா ஜக்ட் இருக்கு. விரைவில் அதை அறிவிப்போம்.