புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம் பெற்றதற்கு தி.மு.க. கண்டனம்

புதுடெல்லி:

மத்திய அரசு புதிதாக அச்சிட்டு வரும் 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்பு தேவநாகரி எண்ணிலும் அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு டெல்லி மேல்-சபையில் கண்டனம் தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், மற்ற நோட்டுகளில் இருப்பது போன்ற சர்வதேச எண்களையே புதிய நோட்டுகளிலும் அச்சிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்த பிரச்சினையை மேல்-சபையில் நேற்று எழுப்பி பேசிய திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், ‘புதிதாக அச்சிடப்பட்டு உள்ள 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் அச்சிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசன விதிப்படி ரூபாய் நோட்டுகளில் சர்வதேச எண்கள் மட்டுமே அச்சிடப்பட வேண்டும். எனவே தேவநாகரி எண் அச்சிடப்பட்டு இருக்கும் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்றார்.

இந்த நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய பின்னரே ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் இடம்பெற வேண்டும் என்றும் கூறினார். இந்தி பேசும் பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுப்பது மற்ற பிரிவினரை அந்நியப்படுத்தும் என்றும் திருச்சி சிவா தெரிவித்தார்.