புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

சென்னை : புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் பாலமுரளி கிருஷ்ணா உயிர் நேற்று பிரிந்தது.

சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் பெற்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. அவருக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை ஈர்த்து வந்தார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் திருவிளையாடல். இயக்குனர் ஏ.பி. நாகராஜனின் உருவாக்கத்தில் வெளியான படம் இது. இந்த படத்தில் வரும் ஒருநாள் போதுமா இன்னொரு நாள் போதுமா என்ற பாடல் உலகப் புகழ் பெற்ற பாடலாகும். அப்பாடலை பாடியவர் தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரது மறைவு இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகும். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.