பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது.

பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன்
அரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர்.

முன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார்.

பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில் இருந்து விலகிய சில மணிநேரங்களில் இரண்டாவது மூத்த அமைச்சரும் விலகியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீஸா மே நாடாளுமன்றத்தில் தனது புதிய பிரெக்ஸிட் திட்டம் குறித்து விலக்குவதற்கு முன்னதாக போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். பிரதமரின் திட்டம் பல கன்செர்வேட்டிவ் எம்.பிக்களுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் 29, 2019 உடன் வெளியேறவுள்ளது. ஆனால் பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு வர்த்தகம் செய்து கொள்வது என்பதை இரு தரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.