‛பிரெக்சிட்’ மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் ஜன.,31ம் தேதி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரெக்சிட் வெற்றியை குறிக்கும் வகையில், 31ம் தேதி இரவில், சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. அதில், ‘அனைத்து நாடுகளுடனும் அமைதி, வளம் மற்றும் நட்பு’ என, குறிப்பிடப்பட உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து, வரும், 31ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. இருப்பினும் மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க, இந்தாண்டு இறுதி வரை அதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.