பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஒரு அடார் லவ் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. அதில், அறிமுக நடிகை பிரியா வாரியர், கண் அசைவு மூலம், ஹீரோவிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.பிரியா வாரியரின் வித்தியாசமான முக பாவங்கள், சமூக ஊடகங்களில், பரவலாக ரசிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதனால், ஒரே பாடலில், நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் நடிகையாக, பிரியா வாரியர் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல், முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, ஐதராபாதில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில், முகீத் கான் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி, அந்த படத்தின் இயக்குனர், ஓமர் லுலு கூறுகையில், ”திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை. அதில், முஸ்லிம்களுக்கு எதிரான வரிகள் எதுவும் கிடையாது.

”எல்லா சமூகத்தவராலும் பாடப்படும், பழமையான பாடலையே, அந்த படத்தில் சேர்த்துள்ளோம்,” என்றார்.