பிரான்ஸில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை: தொற்று குறைந்ததால் சலுகை

பிரான்ஸ் நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் எனும் விதியை வியாழன் முதல் தளர்த்துவதாக அந்நாட்டு பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

சுமார் 7 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் செவ்வாயன்று தினசரி தொற்று பாதிப்பு 3,200 என்ற எண்ணிக்கைக்கு வந்திருக்கிறது. 2020 ஆகஸ்டுக்கு பின் இதுவே அந்நாட்டின் குறைந்தபட்ச பாதிப்பு ஆகும். கடந்த ஆண்டு இறுதியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாட்டில் தொற்று பாதிப்பை 5 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டார். அவரது இலக்கை காட்டிலும் தொற்று பாதிப்பு சரிந்துள்ளது.

இதனால் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை நீக்கி அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜான் கேஸ்டெக்ஸ், “வியாழன் முதல் வெளியிடங்களில் கட்டாய முகக்கவசம் என்பது சில விதிவிலக்குகளுடன் நீக்கப்படும். நெரிசலான இடங்களிலும், அரங்கங்களிலும் தேவைப்படும். கோவிட் ஊரடங்கு உத்தரவு ஜூன் 20 அன்று ரத்து செய்யப்படும். நாட்டின் சுகாதார நிலை எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறியிருக்கிறது. கோடைகால முடிவில் (செப்டம்பர்) சுமார் 3.5 கோடி மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.” என்றார்.