பிரதமர் மோடியை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கமணி

அரசியல் பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் ஓபிஎஸ் அணிக்கு மத்திய பாஜகவின் ஆதரவு இருப்பதாக கருதும், முதல்வர் பழனிசாமி அணி தானும் அந்த ஆதரவை பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் மதிய உணவு இடைவேளையில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களி்ன் முதல்வர்கள் பிரதமரை சந்தித்து பேசிய நிலையில், தமிழக முதல்வரால் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்திக்க முடியவில்லை. இது அதிமுக அம்மா அணிக்கு பின்னடைவாகவே கருதப்பட்டது.

 

இந்நிலையில், டெல்லியில் நடந்த எரிசக்தித்துறை தொடர்பான கூட்டத்துக்கு அமைச்சர் பி.தங்கமணி சென்றார். அங்கு அவர், தமிழக மின் திட்டங்களுக்கு தேவையான நிதியை கோரியதுடன், உள்நாட்டு நிலக்கரிதான் தங்களுக்கு வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமரை சந்திக்க தங்கமணிக்கு அனுமதி கிடைத்தது. அதன்படி பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் பின்னணி இருப்பதாகவே கருதப்படுகிறது.

 

தமிழகத்தை பொறுத்தவரை, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த உதய் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், தற்போது ஏற்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றதால், திட்டங்களுக்கு அனுமதித்ததாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லவே இத்தகைய முடிவெடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

 

மேலும், முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்திக்காத பிரதமர், அமைச்சர் பி.தங்கமணியை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதும் இத்துடன் பொருத்திப்பார்க்க கூடியதாக அமைந்துள்ளது.