‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம்: சோகத்தோடு டிவி பார்க்கும் நிஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். கடந்த சில நாட்களாக அவரைப் பிரிந்திருப்பது வருத்தமாக இருக்கிறது என்கிறார் அவரது காதல் மனைவி நிஷா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘தலையணைப் பூக்கள்’ தொடரின் நாயகியான நிஷா கூறியதாவது:

‘‘கணேஷ் வெங்கட்ராமைப் பிரிந்திருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஒரு வாரமாக தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துவருகிறேன். நானாவது, தொலைக்காட்சியில் அவரைப் பார்க்க முடியும். அவரால் அதுகூட முடியாது. கடந்த புதன்கிழமை என் பிறந்தநாள். அதையொட்டி இமயமலையில் உள்ள சில இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். திடீரென ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சுற்றுலா செல்லமுடியவில்லை.

அந்த நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்னால், எனக்கே தெரியாமல் பல வீடியோக்களை பதிவு பண்ணி, அவரோட நண்பர்களுக்கு அனுப்பியிருக்கார். அதையெல்லாம் அவங்க இப்போ ஒவ்வொன்றா எனக்கு அனுப்பிட்டிருக்காங்க.

ஒரு டிரெஸ் எடுக்குறதுல தொடங்கி எந்த விஷயமா இருந்தாலும் கணேஷை கேட்காமல் செய்யவே மாட்டேன். அதேபோல, 2 நாட்கள்கூட நாங்கள் பிரிநது இருந்தது கிடையாது. இப்போ இந்த ஒரு வாரமே ரொம்ப வருத்தமா இருக்கு.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போனதுல இருந்து கணேஷோட போனும் இப்போ என்கிட்டத்தான் இருக்கு. நடுராத்திரி 1 மணிக்கெல்லாம் சில ரசிகர்கள் போன் பண்ணி, ‘‘சார், போனை கையிலதான வச்சிருக்கீங்க?’’னு கேட்குறாங்க. ஏற்கெனவே வருத்தத்துல இருக்குற எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை” என்று கூறினார் நிஷா.