பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது. மூன்றாவது கூட்டணியை முறிப்பது. இது வரும் ஞாயிறு அன்று முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் தொடர்பாக நேற்று, மத்திய இணையமைச்சர் சவுத்ரி கூறுகையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக அருண் ஜெட்லி மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளார். மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொல்லாவரம் திட்டம், அமராவதிக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். எங்கள் பங்கை பெற போராடுவோம். மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் கடும் நெருக்கடி தருவார்கள் எனக்கூறினார்.