பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தமிழ் மொழியில் இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ஸ்டிக்கரை, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அப்போது இல.கணேசன் எம்.பி. உடன் இருந்தார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவினை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

சாதனை

இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமரின் மக்கள் நல திட்டங்களை தெரிந்து கொள்ள, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 4 பிரிவுகளாக பிரித்து இணையதளம் தொடங்கியுள்ளோம். 9220092200 என்ற எண்ணிற்கு BJP TN மற்றும் இடைவெளி விட்டு பெயர் ‘டைப்’ செய்து கோரிக்கைகளை அனுப்பலாம். அதனை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பிரதமரின் 3 ஆண்டுகால சாதனை மிகப்பெரிய அளவிலானது.

பா.ஜ.க. ஆட்சியிலேயே மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, மோடி 3 ஆண்டுகளில் செய்திருக்கிறார். மத்திய அரசால், தமிழகம் புறக்கணிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சிகள் செய்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் இடையேயான சந்திப்பை விமர்சனம் செய்வது சரியான நடவடிக்கை இல்லை.

பிரதமர் சந்திப்பார்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி ஏன் பிரதமரை சந்திக்கவில்லை? மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தை மாநில அரசு 4-ல் ஒரு பங்கு கூட மக்களிடம் எடுத்து செல்லவில்லை. அதேசமயத்தில் பள்ளி கல்வியில் தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் முடிவை வரவேற்கிறோம். உண்மையான விவசாயிகளை பிரதமர் சந்திப்பார். கண்டிப்பாக விவசாயிகளை நானே திரட்டி பிரதமரிடம் அழைத்து செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்

எச்.ராஜா பேசும்போது, “தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இது அநாகரிகமான பேச்சு. இதற்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும். தேர்தல் வரவில்லை என்ற வயிற்று எரிச்சலில் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை கூறியிருக்கிறார்” என்றார்.