பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் தற்கொலை

பத்தினம் திட்டா: கேரளாவில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட பெண் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து புகார் சம்பங்கள்

கேரளாவில், பாவ மன்னிப்பு பெற்ற பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கற்பழிப்பு செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை கற்பழித்தது உள்ளிட்ட அதிர்ச்சி சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய விவகாரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பெண் லில்லி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

பாதிரியாரின் அடாத செயல்

அய்ரூர் செயின்ட் ஜான் சர்ச்சில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார். அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்த பாவ மன்னிப்பு அது. அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் அந்த பாதிரியார் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிரியாருக்கும், என் சகோதரியின் கணவருக்கும் முன் விரோதம் உண்டு. இதன் காரணமாகவே, அந்த பாதிரியார் அப்படி செயல்பட்டுள்ளார். இப்பிரச்னையை நாங்கள் விடுவதாக இல்லை. போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.