பாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் 7 குழுக்களாக பிரிந்து விசாரணையை நடத்துகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி, அதே கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்காக பாலியல் தேவைக்கு உட்படுமாறு வற்புறுத்துவது போன்ற ஆடியோ வெளியானது.

அவ்வாறு செய்தால் 85% மதிப்பெண்களுடன் , பணமும் கிடைக்கும் என்றும், தனக்கு ஆளுநர் வரை செல்வாக்கும் உள்ளதாகவும் பேராசிரியர் பேசுவதும், அதற்கு அந்த மாணவிகள் மறுப்பதும் போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த 16-ம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி செயலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் பேராசிரியர் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு 6.30 மணி அளவில் பேராசிரியர் நிர்மலா தேவியை கைது செய்தனர்.

பின்னர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடைபெற்ற நிலையில் மறுநாள் 2 வது நாளாகவும் அவரிடம் தொடர்ந்து 23 மணிநேரம் விசாரணை செய்தனர். மேலும், பேராசிரியை நிர்மலா தேவியின் வாக்கு மூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, அவரிடம் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வு பெற்ற நீதிபதி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் வழக்கை டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, புதன்கிழமை இரவு வழக்கு விருதுநகர் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ராமநாதபுரம், கன்னியாகுமாரி, நெல்லை, தேனி , திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சிபிசிஐடி அலுவலகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

சிபிசிஐடி விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி (எஸ்.பி) மற்றும் உதவி விசாரணை அதிகாரி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, 7 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.