பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளி சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2013 ம் ஆண்டு முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசாராமை கோர்ட்டிற்கு அழைத்து வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர் அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி மதுசூதனன் தீர்ப்பு வழங்கினார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் ஆசாராமிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கும் அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால், ஆசாராமிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசாராம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் ராஜஸ்தான், அரியானா, உ.பி., குஜராத், பஞ்சாப், ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் மூலம் நிலைமையை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசாராமின் ஆசிரமங்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.