‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கேட்பதாகவும், அதனை வழங்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இலங்கையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எம்.பி பதவி: அமைச்சரே எதிர்ப்பு
சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம்
இதன்போது, மாணவியொருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் விரிவுரையாளர் ஒருவரின் பெயரையும், நாடாளுமன்றில் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரிடையேயும், அதற்கு வெளியிலும் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதோடு, கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளபோதும், அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாவர். இதன் காரணமாக, உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துத் தொடர்பில், முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில காலங்களுக்கு முன்னர், ஆண் விரிவுரையாளர் ஒருவர் – மாணவியொருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, குறித்த விரிவுரையாளருக்கு எதிராக அந்த முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து, குறித்த விரிவுரையாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதோடு, அவருக்கு எதிரான விசாரணைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், மேற்படி விரிவுரையாளரின் பெயரை, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் மீதான குற்றச்சாட்டினை வைத்துக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள ஒட்டுமொத்த மாணவிகளை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளமையினை பலரும் கண்டித்துள்ளனர். சமூக வலைத்தளமான ஃ பேஸ்புக்கில், அமைச்சரின் உரைக்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உயர்கல்வி அமைச்சரின் இந்தக் கூற்றினை, அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கண்டித்து அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் முஸ்லிம் சமூகத்தைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது. இது உயர்கல்வி அமைச்சருக்கு காழ்ப்புணர்ச்சியையும் எரிச்சலினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, உயர்கல்வி அமைச்சரின் உரையை நான் பார்க்கின்றேன். எனவே அமைச்சரின் இந்தக் கூற்றை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்க்க வேண்டியுள்ளது’ என, பிரதியமைச்சர் ஹரீஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கை: ’இன்புளுவென்சா ஏ’ வைரஸ் தாக்கம் – 3000 பேர் வரை பாதிப்பு
இலங்கையில் பிரிட்டன் ரக்பி வீரர்கள் மரணம்: நடந்தது என்ன?
உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றிய தினத்தில், பிரதியமைச்சர் ஹரீஸ் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்கவில்லை.

எவ்வாறாயினும், உயர்கல்வி அமைச்சர் மேற்படி தகவலைக் கூறி நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அங்கிருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட எந்த உறுப்பினரும், தமது எதிர்ப்பினை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொருபுறமாக, உயர்கல்வி அமைச்சரின் இந்த உரைக்குப் பின்னணியில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் இருப்பதாக தமக்கு சந்தேகம் உள்ளது என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய உண்மைக்குப் புறம்பான விடயங்களை, உபவேந்தர் நாஜிம் தனது சுயநலனுக்காக கூறி வருவதாகவும், அந்தத் தகவல்களே அமைச்சரைச் சென்றடைந்திருக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவர் ஜப்பார் கூறியுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் பி.பி.சி. தமிழ் வினவியபோது; “அந்தக் குற்றச்சாட்டு பொய்யானதாகும். அதை நூறுவீதம் நான் மறுக்கின்றேன். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமோ, வேறு யாரிடமோ இவ்வாறான தகவல்கள் எதனையும் நான் கூறவில்லை” என உபவேந்தர் பதிலளித்தார்.

அவ்வாறாயின் ‘தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகள் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது’ என்று, உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியமைக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எனும் வகையில் உங்கள் பதில் என்ன என்று பி.பி.சி. தமிழ் தொடர்ந்து கேட்டபோது; “அது அமைச்சர் சொன்ன விடயமாகும். அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது” என, உபவேந்தர் நாஜிம் தெரிவித்தார்.