பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி

மாட்டுப் பொங்கல் தினமான இன்று பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனை யாரும் பிடிக்க வில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று பால மேட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பாலமேடு, அலங்காநல்லூரில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பறக்கும் காமிரா மூலம் போலீசார் கண்காணித் தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 1080 காளைகள், 1188 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.பாலமேடு ஜல்லிக்கட்டில் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் எடுத்து கொண்டனர்.பாலமேடு ஜல்லிக்கட்டின் ஊர் மரியாதை பெற கூடிய கோயில் காளைகளின் ஊர்வலம் துவங்கியது.

ஜல்லிக்கட்டில் கம்புகளைக்கொண்டு அமைக்கப்பட்ட பார்வையாளர் இருக்கைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் காலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. சீறி வந்த காளைகளை வீரர்கள் அடங்கி, பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.

இதனிடையே, பார்வையாளர் வரிசையில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்ற 19 வயது வாலிபர், காளை முட்டி பலத்த காயம் அடைந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், காளிமுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது 7-வது சுற்று நடைபெற்றுவருகிறது. இதில், 430 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டுவருகின்றன. சீறி வரும் காளைகளை அடக்க வீரர்கள் முயன்றுவருகின்றனர்.

உயிரிழந்த காளிமுத்து, அம்மா மற்றும் 15 வயதுடைய தங்கையுடன் வசித்துவந்துள்ளார். இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். இந்நிலையில், காளிமுத்து மில் வேலைக்குச் சென்று தனது குடும்பத்தைக் காப்பாற்றிவந்துள்ளார். இன்று, பாலமேடு ஜல்லிக்கட்டு பார்க்க தனது நண்பர்கள் 10 பேருக்கும் அதிகமானவர்களோடு வந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளைகள் வெளியே வரும் இடத்தில் 4 காளைகள் சேர்ந்து வந்துள்ளது. அப்போது ஒரு காளை, காளிமுத்துவை வயிற்றுப் பகுதியில் தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, காளிமுத்துவை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அப்போது, திருப்பாலை பகுதியைக் கடந்துவரும்போது, காளிமுத்து இறந்துவிட்டார். அவரது உடலை, பழைய அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்துவிட்டனர். காளிமுத்து குடும்பத்துக்கு அரசும், விழா கமிட்டியும் உதவிசெய்ய வேண்டும் என அவரது நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 25 வீரர்கள் காயமடைந்தனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 காளைகளை பிடித்த மணி என்பவருக்கு முதல் பரிசு; ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளில் 7 சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.