பாரிஸ் பயணம் – 11 : கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீரவிசாரித்து அறிவதே மெய்!’
எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே!
…………………………………………………………..
 பாரிஸ் பயணம் – 11   
பாரிஸில் நாங்கள் பார்த்த இடங்கள் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தன. இரவு உணவை வெளியே அருந்திவிட்டு பேருந்தில் தங்குமிடம் சென்றோம். மறுநாள் எங்கெல்லாம் செல்லலாம் என்பது பற்றி கூகுள் பண்ணிப் பார்த்தோம். ஏற்கனவே நாங்கள் சில இடங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனாலும் அருகருகே இருக்கும் இடங்கள் என்றால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பதால் அப்படியான இடங்களைத் தெரிவு செய்தோம்.
மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு இன்னுமொரு அருங்காட்சியகத்தைப் பார்க்கச் சென்றோம். பாரிஸ் நகரத்தில் ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர் பெற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. அனேகமான சந்திகளில் அல்லது அருகில் ஏதாவது உருவச் சிலையைக் காணமுடியும். ஒரு அருங்காட்சி அகத்தை அவசரமாகப் பார்ப்பதானால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது எடுக்கும். ஓவியப் பிரியர் என்றால் சில ஓவியங்கள் உங்களை வியக்க வைக்கும். அந்த இடத்தைவிட்டு அசையவே மனம்வரமாட்டாது. நாங்கள் ‘ஓர்ஸே மியூசியம்’  என்ற அருங்காட்சி அகத்தைத்தான் அன்று பார்க்கச் சென்றோம். முன்பு ஒரு காலத்தில் அதாவது 1939 ஆம் ஆண்டு வரை தொடர்வண்டி நிலையமாக இந்த இடம் இருந்ததாகத் தெரிகின்றது. இந்தக் காட்சியகம் சீன் நதிக்கரையின் இடது பக்கத்தில் இருக்கின்றது. 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தைப் பார்பப்பதற்காக வருடா வருடம் சுமார் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றார்கள். பாரிஸ் நகரத்தில் பொதுவாக எங்கே பார்த்தாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவே காணப்படுகின்றார்கள்.
அருங்காட்சியகம் திறப்பதற்கு முன்பே வந்து விட்டபடியால், வெளியே பலர் காத்திருந்தார்கள். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், யானை, குதிரை, சிங்கம் போன்ற மிருகங்களின் பெரிய உருவச் சிலைகள் வெளியே உள்ள முற்றத்தில் எங்களை வரவேற்றன. அல்பிறெட் ஜாக்குயுமாட் என்பர் வெண்கலம் கலந்த கலவையால் இங்கே உள்ள இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை உருவாக்கியிருந்தார். அவற்றைக் கடந்து உள்ளே சென்றோம். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதிகள் ஏதையாவது கொண்டு சென்றால் அவற்றை வாங்கிக் கவனமாகப் பாதுகாப்பு அறையில் வைக்கிறார்கள். கமெரா கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். சுற்றுலா முகவர்களுக் கூடாக வந்தால் வரிசையில் நிற்கும் நேரத்தைச் சேமிக்கலாம். வாசலில் நீங்கள் விரும்பினால் காதில் மாட்டிக் கொள்ளும் எலக்ரோனிக் இயபோன் தருகிறார்கள். அந்தந்த ஓவியங்கள் பக்கம் செல்லும் போது அதன் மூலம் அவை பற்றிய விளக்கங்களைக் கேட்க முடியும். யார் அதை வரைந்தார்கள், அதன் காலம் என்ன, அதன் சிறப்பு என்ன என்பது போன்ற விளக்கங்கள் ஏற்கனவே பதிவு செய்த ஒலிப்பதிவு மூலம் கேட்க முடிகின்றது.
புகழ் பெற்ற பல ஓவியர்களின் ஓவியங்கள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன. 1848 ஆம் ஆண்டு தொடக்ம் 1914 ஆம் ஆண்டுவரை, குறிப்பாகப் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர்களுக்குக் கிடைத்த பல ஓவியங்கள் இங்கே இருக்கின்றன. ஓவியர்களில் குறிப்பாக  போன்றவர்களின் ஓவியங்களும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன. இங்கே உள்ள ஒஸ்கார் கிலாடி மானி என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் ‘வாட்டலில்லி’ ‘சண்றைஸ்’ போன்ற ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவரது ஓவியங்களைச் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. 1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் வரைந்த ஓவியங்களில் சில விற்பனையான போது 2007 ஆம் ஆண்டு ஒரு ஓவியம் 18.5 மில்லியன் பவுண்டுக்கும், 2008 ஆம் ஆண்டு இன்னுமொரு ஓவியம் 41 மில்லியன் பவுண்டுக்கும் விற்பனையாகின.
இன்னுமொரு ஓவியரான எட்வாட் மனெற்  என்பவரின் ஓவியங்களும் சிறப்பு வாய்ந்தவை. ஒலிம்பியா என்ற அவர் வரைந்த ஓவியம் பலரையும் கவரக் கூடிய ஓவியமாக இருக்கின்றது. 1865 ஆம் ஆண்டு இவர் வரைந்த பெண்ணின் ஓவியம் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்ட்டபோது ஒரு விலைமாதின் ஓவியம் என்று பலரும் கேலிசெய்தனராம். 1890 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு அதைக் கொள்வனவு செய்து இப்போது இங்கே காட்சிக்கு வைத்திருக்கின்றது. 1538 இல் வரையப்பட்ட ரிற்ரியனின் ‘வீனஸ் ஒவ் உர்பினோ’ என்ற ஓவியத்தைப் பார்த்து சற்று வித்தியாசமாக இந்த ஓவியம் வரையப்பட்டதாகவும் சிலர் குறிப்பிடுவர். அந்த ஓவியத்தில் உள்ள குட்டி நாய்க்குப் பதிலாக இவரது ஓவியத்தில் கறுப்புப் பூனை ஒன்று இடம் பெற்றிருப்பதும் அவதானிக்கப்பட்டது. இதுபோன்ற ஆடையற்ற நிர்வாணமான பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டாலும் ‘வீனஸ்’ என்ற பெயரிலேயே தங்கள் ஓவியங்களை அனேகமானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். வீனஸ் என்றால் தெய்வீகத் தன்மை கொண்டதாக மக்களை நம்பச் செய்வதற்கே அப்பெயர்களைச் சூட்டினர். ஆனால் இவர் மட்டும் துணிந்து ‘ஒலிம்பியா’ என்று தனது நிர்வாண ஓவியத்திற்குப் பெயர் சூட்டியிருந்தார்.
ரொறன்ரோவில் நடந்த குறுந்திரைப்பட விழாவின்போது ஒருமுறை பரிசு பெற்ற வெள்ளைப்பூனை என்ற குறும் திரைப்படத்தின் இறுதிக்காட்சி இந்த ஓவியத்தில் உள்ள கறுப்புப் பூனையைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது. அந்தக் குறும் படத்தில் லீனாவின் அபார நடிப்பு பாராட்டத் தக்கது.