பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு

பாராளுமன்றம் முடங்கிய நிலையில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் 23 நாட்களும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் முடங்கியது காரணமாக இந்த 23 நாட்களுக்கான சம்பளம் 3.66 கோடியை பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 400 எம்.பி.க்கள் தங்களுடைய சம்பள பணத்தை பெற மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்றம் முடக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஆனந்த் குமார், காங்கிரஸ் கட்சி இதுபோன்ற அரசியலுக்காக கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் தோல்வியை தழுவும் என்றார். “பாராளுமன்றத்தில் எங்களால் 21 நாட்களாக விவாதம் எதுவும் நடத்த முடியவில்லை, முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியது. அவையில் எந்தஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை நாங்கள் பெற கூடாது என முடிவு செய்து உள்ளோம்,” என கூறிஉள்ளார் ஆனந்த் குமார்.

ஆளும் கட்சி அல்லது கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்று சம்பளம் வாங்க கூடாது என முடிவு செய்து உள்ளது இதுவே முதல் முறையாகும் என கூறிஉள்ளார். எம்.பி.க்கள் ஒருமாதம் சம்பளம் மற்றும் படிகளாக ரூ. 1.6 லட்சம் பெறுகிறார்கள், இதில் ரூ. 91,699-யை விட்டுக்கொடுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மோடி அரசிற்கான மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி இதுபோன்று பாராளுமன்றத்தை முடக்கி எதிர்மறையான அரசியலை மேற்கொள்கிறது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். சம்பளத்தை பெற மாட்டோம் என வரலாற்று முடிவை எடுத்து உள்ளோம், அவர்கள் முடிவு எடுக்கட்டும். அவர்கள் இந்த தேசத்தின் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறினார் ஆனந்த குமார்.