பாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது எதிர்கால உயர்விற்காக உயர் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பலர் தொடர்ச்சியாக போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றார்கள். அவர்கள் போராடுவது தமக்காக அல்ல. யாருக்காக என்று அவர்களே கோசமிடுகின்றார்கள். கேட்டுப்பார்ப்போம்.
“எமக்காக போராடியவர்கள் உயிருடன் போராட நாம் வீட்டுக்குள் கிடப்பதா?;…

தமிழ் அரசியற் கைதிகளுக்காக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் தயாராவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக ஓரணியில் அணிதிரண்டு வருமாறு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். கடந்த முப்பத்தொன்பது நாட்களாக மூன்று தமிழ் அரசியற் கைதிகள் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற அதே நேரம், 132 தமிழ் அரசியற் கைதிகள் சிறைகளில் வாடுவதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, இது மாணவர்களுடைய பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழ் மக்களது பிரச்சினை என்று குறிப்பிட்ட மாணவர்கள், எமக்காக போராடியவர்கள், சிறைச்சாலைகளில் உயிருடன் போராடிவரும் நிலையில் மக்களாகிய நாம் வீடுகளில் சொகுசாக வாழ்ந்துவருகிறோம், மேலும், மாணவர்களாகிய நாம் எமது கல்வியினையும் இடை நிறுத்திவிட்டு அரசியற் கைதிகளுக்காக போராடிவரும் நிலையில் தமிழ் மக்களாகிய நீங்கள் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்று உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சிறைகளில் வாடும் மக்களுக்காக தமிழ் மக்கள் அனைவரும் பேதங்களைக் கடந்து மாணவர்களுடன் ஒன்றிணைந்தால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று மேற்குறித்த அறைகூவலில் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறாக பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் கற்கை நேரங்களை தவிர்த்து சிறையில் வாடுகின்றவர்களுக்காக போராடி வருகின்றபோது, எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், அடுத்து வரும் தேர்தல்களில் மீண்டும் ஆசனங்களைக் கைப்பற்றி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய சலுகைகள் மற்றும் வசதிகளை தமது வசமாக்கிக் கொள்ள “போராடத்” தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக தமிழ் பேசும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைமைப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் பேசும் எம்பிக்கள் தங்கள் தொகுதி வேலைகளைக் கைவிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு செல்வதற்காக தங்கள் நேரங்களை செலவு செய்து செல்லுகின்றார்கள். பாராளுமன்றப் பதவிகள் தான் குறியே அன்றி மக்களின் துயரங்கள் அவர்களது கண்களுக்கு தெரியாமல் உள்ளது. அடுத்த தேர்தலில் தங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். அதுவே அவர்களுக்கிடையிலான “போராட்டம்”. மக்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.