பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது.

முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு.

“காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மலேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது பாமாயில். அதேபோல் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாமாயிலின் பங்களிப்பானது 4.5 சதவீதமாக உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் தான் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தியா கைவிட்டாலும், மலேசியாவால் பாமாயிலுக்கான புதிய சந்தையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும், பாமாயில் விலையேற்றத்தால் இந்தியாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் மற்றொரு கருத்து உள்ளது.

பாமாயில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? அல்லது நிலைமையை சமாளிக்குமா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் பிபிசி தமிழிடம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு கட்டுப்பாடு விதித்திருப்பதால் மலேசியாவுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்கிறார் அதன் தோட்டப்புறம் மற்றும் மூலப்பொருள் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கோகிலன்.

நீண்ட காலமாக மலேசியாவுக்கு சிறந்த நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டும் அவர், அத்தகைய நல்லுறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

“இந்தியாவிலும் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் உள்ளன. கச்சா பாமாயிலை அதிகளவு கொள்முதல் செய்து அதன் மூலம் உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வேலை கொடுக்க இந்திய அரசு திட்டமிடலாம். அதேசமயம் மலேசியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்புக்கு ஆளாகும்.

கடந்த காலங்களில் ‘பார்ட்னர் சிஸ்டம்’ என்ற அடிப்படையில் இந்தியாவும் மலேசியாவும் செயல்பட்டன. அதன்படி மலேசியாவில் ரயில்வே திட்டங்களை இந்தியா செயல்படுத்தும். அதன் மதிப்புக்கேற்ப மலேசியா பாமாயில் வழங்கும். தற்போது அத்தகைய ‘பார்ட்னர் சிஸ்டம்’ ஏதும் இல்லை. எத்தனை மில்லியன் அல்லது பில்லியன் டாலர் மதிப்புள்ள பாமாயிலை ஏற்றமதி செய்கிறோம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தேவையின்றி ஒரு சந்தையை இழப்பது குறித்து மலேசிய அரசு யோசிக்க வேண்டும்.

மலேசியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. அதனால்தான் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு மலேசிய அரசு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மலேசிய பாமாயில் எண்ணை வர்த்தகத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று கவலை தெரிவிக்கிறார் கோகிலன் பிள்ளை.

“பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் மலேசியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பாமாயில் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும் பாதிப்பை சந்திக்கும்,” என்கிறார் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் செனட்டருமான டி. மோகன்.

இதனால் லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு மிகவும் முக்கியமானது. கடந்த தேசிய முன்னணி அரசு இருதரப்பு உறவை நல்ல முறையில் பேணி வந்தது. ஆனால் இன்றைய மலேசிய அரசு எந்த அடிப்படையில் செயல்படுகிறது என்பது தெரியவில்லை. இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக மலேசியாவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

மலேசியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியா, மலேசியா இடையேயான இருதரப்பு உறவானது நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இத்தகைய நிலை நீடிப்பது நல்லதல்ல. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் நாம் தலையிடத் தேவையில்லை. மலேசியா சொல்வதை கேட்க வேண்டும் எனும் அவசியம் இந்தியாவுக்கும் இல்லை.

இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டால் அதன் எதிரொலியாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை மலேசிய அரசு உணரவேண்டும். எனவே, சில விவகாரங்களைப் புறந்தள்ளிவிட்டு இந்திய அரசுடன் சுமூக உறவை ஏற்படுத்தும் வகையில் மலேசிய அரசு செயல்பட வேண்டும்.

பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் மலேசியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பாமாயில் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும் பாதிப்பைச் சந்திக்கும்,” என்கிறார் டி.மோகன்.

இந்தியாவின் மறைமுகத் தடையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து மலேசியாவால் மீள முடியும் என்கிறார் , செல்லியல் இணையதள செய்தி ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் இரா. முத்தரசன்.

பாமாயில் விலை உலகச் சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுபாடுகளால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கருதுகிறார்.

“தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக மலேசிய அரசு மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருந்து வந்தது. ஏதேனும் ஒரு வகையில் மலேசியாவுக்கும் அதன் பிரதமர் மகாதீருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் இந்தத் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகக் கருத முடிகிறது

இந்தத் தடையால் மிகக் குறுகிய காலத்துக்குள் மலேசியா பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. எனினும் உலகச் சந்தையில் பாமாயிலுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே, இந்தியா இறக்குமதி செய்யாவிட்டாலும் மலேசியா பிற நாடுகளை அணுகி புதிய இறக்குமதியாளர்களை அடையாளம் காணும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா திடீர் கட்டுப்பாடு: சமாளிக்குமா மலேசியா?

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் கட்டுப்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து மலேசியா மீளமுடியும் எனக் கருதுகிறேன். தற்போது பாமாயில் விலை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளதால் இந்தியாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்தியாவை பொறுத்தவரை பாமாயில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அத்தகைய அத்தியாவசியப் பொருளின் விலை அதிகரிக்கும்போது அதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இந்தியாவின் பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பாமாயில் விலையும் அதிகரித்தால் மக்கள் மேலும் அதிருப்தி அடைவர். எனவே இந்தியா விதித்துள்ள இந்தத் தடையால் அந்நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் என்றே சொல்ல வேண்டும்,” என்கிறார் முத்தரசன்.

இந்தியா மலேசியாபடத்தின் காப்புரிமைTWITTER /NARENDRA MODI

“பாமாயில் விலை ஏற்றம் கண்டுள்ளதால் அடுத்து வரும் காலாண்டில் மலேசியாவுக்குப் பாதிப்பு இருக்காது என்று சிலர் கூறுவதை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. ஒரு நிதியாண்டின் அடுத்தடுத்த காலாண்டுகளில்தான் மெல்ல மெல்ல பாதிப்புகள் குறித்து தெரியவரும். இந்தியா கைவிட்டாலும் பிற நாடுகளை மலேசியா அணுகலாம். புதிய சந்தையை நோக்கிச் செல்லலாம் என்பது சரிதான். எனினும் அவ்வாறான புதுச் சந்தையை உடனடியாக கண்டறிய முடியுமா என்பது கேள்விக்குறிதான்,” என்கிறார் ஏ.டி. குமார ராஜா

ஏற்கெனவே ஐரோப்பாவில் பாமாயில் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு நிலவி வருவதாக கூறும் அவர், பாமாயிலுக்கு எதிராக ஐரோப்பாவில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக சொல்கிறார்.

“எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மலேசிய பாமாயில் சந்தையை விரிவுபடுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அது நல்ல விஷயம்தான் என்றாலும் குறுகிய காலத்திற்குள் அந்தச் சந்தையில் கால் பதிக்க முடியுமா எனும் கேள்வியும் எழுகிறது. தற்போது எழுந்துள்ள விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், இந்தியாவும் மலேசியாவும் அரசியலைக் கடந்து வர வேண்டும்.

தற்போதைய உலகச் சூழலில் வல்லரசு நாடுகள் பொருளாதார ரீதியில் தங்களது பலத்தைக் காட்டி வருகின்றன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சனை என்றால் உடனடியாக இருநாடுகளுமே தங்களது பொருளாதார பலத்தை வெளிப்படுத்துகின்றன. இரானுடன் மோதல் என்றால் அமெரிக்கா உடனே பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. எனவேதான் அரசியலை கடந்து செயல்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்,” என்கிறார் ஏ.டி. ராஜா.

மறைமுக வணிகப் போர் நடக்கிறதா?

இதற்கிடையே சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள தடையானது மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மறைமுக வணிகப் போர் மூள்வதைப் போல் இருப்பதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இத்தகைய தடையால் பாமாயில் தொழில் சார்ந்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்று இச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.